மதம்,மொழி,நாடு,இனம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உண்மை


97 வயது மகிழ்ச்சி!


நமது அருமை நண்பர் 'அது ஒரு கனாக்காலம் ' சுந்தர ராமன் அவர்கள் எனக்கு மிகவும் உத்வேகம் தரும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.
ஆங்கிலத்தில் இருந்த அந்த வாழ்க்கைச் செய்தியை உடனடியாக எல்லோருடனும் பகிர்ந்து கொண்டால் அனைவருக்குமே பயனளிக்கும் என்ற எண்ணத்தில் அதனுடைய தமிழ் வடிவத்தை இங்கே தருகிறேன்.

97 வயது நான்கு மாதங்கள் ஆகிறது மேலே நீங்கள் படத்தில் பார்க்கும் 
ஜப்பானிய டாக்டருக்கு.
உலகிலேயே நீண்ட வருடங்கள் மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களில் அவரும் ஒருவர்.மருத்துவக் கல்வி பயில்விக்கும் கல்வியாளராகவும் இருப்பவர்.
அவரது பெயர் Dr.Shigeagi Hinohara. தமிழில் அதை நான் அச்சிட்டால் இப்படி வருகிறது .டாக்டர்.ஷிகியேகி ஹிநொஹர.(அந்த அரும் பெரும் முதியவர் என்னை மன்னிப்பாராக)
டோக்கியோவில் இருக்கும் St.Luke அகில உலக மருத்துவமனையில் 1941 ம வருடத்தில் இருந்து அவரது மாயக் கரங்கள் பட்டுக் குணமானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இரண்டாம் உலகப் போரில் சிதிலமடைந்த டோக்கியோ நகரில் உலகத் தரம் வாய்ந்த ஒரு மருத்துவ மனையையும் ,மருத்துவக் கல்லூரியையும் நிறுவ வேண்டும் என்ற தனது கனவை கடின உழைப்பினால் அவரே நிறைவேற்றினார்.
இன்று அந்த இரண்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் டாகடர் 150 புத்தகங்களுக்கும் மேலே எழுதி மற்றவர்களுக்கு ஒளிகாட்டி இருக்கிறார்.

பல லட்சம் பிரதிகள் விற்றிருக்கும் ''Living Long,Living Good'' என்ற டாக்டரின் புத்தகத்தில் இருந்து நாம் பயன் பெறச் சில வழிகாட்டல்கள்...

'நன்றாக இருக்கிறோம்என்ற உணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி வெறுமனே நல்ல உணவுகளைச் சாப்பிடுவதாலோ இல்லை நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாலோ அல்ல.இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேறெங்கும் போக வேண்டாம்,நமது குழந்தைப் பருவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.
குதித்துக் களித்து விளையாடிய போது எத்தனை முறை உண்ணாமலேயே இருந்திருப்போம்.தூக்கத்தையே மறந்து ஆடித் திளைத்திருப்போம்.ஆனால் அப்போது குழந்தைகளாக இருந்த பொழுது பொங்கிய சக்தி இப்போது வேளா வேளைக்கு உண்டு,உறங்கும் நம்மிடம் இருக்கிறதா?நிச்சயம் இல்லை.
எனவே பெரியவர்களான பின்னும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் குழந்தை மனோபாவத்தை இழந்து விடாதீர்கள்.
நேரத்துக்கு மதிய உணவு,நேரத்துக்குத் தூக்கம் என்ற வெற்றுக் கட்டுப் பாடுகளால்தான் உடல் களைப்படைகிறது.உடல் நலம் என்பது வெறும் விதிகளால் பேணப் படுவதல்ல.

மதம்,மொழி,நாடு,இனம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உண்மை என்னவென்றால் அதிக நாள் உயிர் வாழ்பவர்கள் எல்லாம் அதிக உடல் எடை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே.
எனது காலை உணவு காஃபி,ஒரு டம்ளர் பால், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து ஆரஞ்சுச் சாறு
ஆலிவ் ஆயில் ரத்தக் குழாய்களின் நலத்துக்காகவும்,தோலின் பொலிவுக்காகவும்.
மதியம் பாலும்,கொஞ்சம் பிஸ்கட்டுகள் மட்டுமே.அதுவும் வேலை மிகுதியாக இருந்தால் மதியச் சாப்பாடே நான் உண்ணுவதில்லை.வேலையில் முழுக் கவனமும் செலுத்தும் போது எனக்குப் பசியே எடுப்பதில்லை.
இரவு காய்கறிகள்,ஒரு துண்டு மீன், சாதம்.
வாரத்துக்கு இரண்டு முறை கொழுப்பற்ற நூறு கிராம் இறைச்சி.

அடுத்து,எதையுமே முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
2014 வரை எனது பணிகள் என்னவென்று என்னால் திட்டமிடப் பட்டு விட்டன.அதில் எனது கேளிக்கையும் அடங்கும்,2016ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ்தான் அது!

பணி ஓய்வு என்பதற்கு அவசியமே இல்லை.அப்படிக் கண்டிப்பாகத் தேவை என்றால் 65வயது தாண்டிய பிறகு யோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.நான் வருடத்துக்கு 150 விரிவுரைகள் ஆற்றுகிறேன்.60 முதல் 90 நிமிடங்கள் வரை உரையாற்றுகிறேன்,உடல் பலத்தைப் பெருக்குவதற்காக நின்று கொண்டு!

உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பரிசோதனையையோ,அறுவைச் சிகிச்சையையோ பரிந்துரைத்தால் அவரிடம் நீங்கள் முதலில் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்.
'உங்கள் கணவருக்கோ,மனைவிக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ இதே சிகிச்சையைப் பரிந்துரைப்பீர்களா?' என்பதே அது.
பொதுவாக மக்கள் நம்பிக் கொண்டிருப்பதைப் போல எல்லோரையுமே டாக்டர்கள் குணப் படுத்தி விட முடியாது.
தேவை இல்லாமல் அறுவைச் சிகிச்சைகளுக்கும்,அவற்றின் வலிகளின் கொடுமைகளுக்கும் ஏன் ஆளாகிறீர்கள்? எனக்குத் தெரிந்து இசைக்கு நிறைய நோய்களைக் குணப் படுத்தும் ஆற்றல் இருக்கிறது,அதுவும் மற்ற மருத்துவர்கள் கற்பனையே செய்யாத அளவுக்கு.

உடல் நலத்துடன் இருக்க படிக்கட்டுக்களில் ஏறிச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.அத்துடன் உங்கள் பொருட்களையும் நீங்களே சுமந்து செல்லுங்கள்.நான் என் தசைகள் வலுப் பெற எப்பொழுதும் இரண்டிரண்டு படிகளாகத்தான் ஏறிச் செல்கிறேன்.

எனக்கு உத்வேகம் அளிப்பது ராபர்ட் ப்ரௌனிங்கின் 'அப்ட் வொக்லர்' என்ற கவிதைதான்.எனது சிறுமைப் பிராயத்தில் எனது தந்தை எனக்கு வாசித்துக் காட்டியது.
சிறிய கிறுக்கல்களை விடப் பெரிய ஓவியங்களையே வரைய முயல வேண்டும் என்று அந்தக் கவிதை தூண்டுகிறது.
நாம் உயிரோடு இருக்கும் வரையிலும் போட்டு கொண்டே இருந்தாலும் முடிக்க முடியாத ஒரு மாபெரும் வட்டத்தை வரைய வேண்டும் என்கிறது அந்தக் கவிதை.நாம் பார்க்கப் போவதெல்லாம் அந்த வட்டத்தினுடைய ஒரு சிறிய வளைவையே.மீதி எல்லாம் நம் பார்வைக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் தூரத்தில் அந்த வட்டம் பூர்த்தியாகத்தான் இருக்கிறது.

வலி என்பது ஒரு புரியாத புதிர்.வலியை மறப்பதற்கு ஒரே வழி நம் மனதை வேறு கேளிக்கைகளில் ஈடுபடச் செய்வதுதான்.பல்வலியால் வேதனைப் படும் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.அது வலியை மறந்து விட்டு உங்களுடன் விளையாட ஆரம்பித்து விடும்.எல்லா மருத்துவ மனைகளிலும் கேளிக்கை சாதனங்கள் இடம் பெற வேண்டும்.எங்கள் செயின்ட்.லியூக் மருத்துவ மனையில் இசை நிகழ்ச்சிகள்,விலங்குகள் மூலம் சிகிச்சை,ஓவிய வகுப்புக்கள் அனைத்தும் உண்டு.

பொருட்களைக் குவித்துக் கொண்டே போக வேண்டும் என்ற வெறியில் பைத்தியம் பிடித்து அலையாதீர்கள்.உங்கள் கணக்கு முடிந்து நீங்கள் போகப் போகும் அந்த இடத்திற்கு நீங்கள் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது.

மருத்துவ மனைகளின் அனைத்துப் பகுதிகளிலும் சிகிச்சை கொடுக்கும் வசதிகள் இருக்கும் படி அவை கட்டப் பட வேண்டும்.எங்கள் மருத்துவ மனையில் காரிடார்கள்,பேஸ்மென்ட்கள், சர்ச் ஹால் இப்படி எங்கு வேண்டுமானாலும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும்.அதனால்தான் தீவிர வாதிகளின் விஷ வாயுத் தாக்குதலில் பாதிக்கப் பட்டு ஒரே நேரத்தில் இங்கே அனுமதிக்கப் பட்ட 740 பேரில் 739 பேரை எங்களால் காப்பாற்ற முடிந்தது.

விஞ்ஞானத்தால் மக்கள் அனைவரையும் குணப்படுத்தவோ,மக்கள் அனைவருக்கும் உதவி புரியவோ முடியாது.அது மக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகத்தான் பார்க்கும்,ஆனால் வியாதிகளோ தனித் தன்மைகள் கொண்டவை.ஒவ்வொரு மனிதனும் பிரத்தியேகமானவன்.அவனது நோய்கள் அவனது இதயத்தோடு தொடர்பு கொண்டவை.அதனால் ஒரு மனிதனின் நோய்களை அறிந்து கொள்ளவும்,அவற்றைக் குணப் படுத்தவும் வெறும் மருத்துவக் கலை மட்டும் போதாது.ஓவியம்,இசை போன்ற மற்ற கலைகளின் பங்களிப்பும் வேண்டும்.

வாழ்க்கை சம்பவங்களால் நிறைந்தது.நான் ஒரு முறை விமானத்தில் சென்ற போது அது தீவிர வாதிகளால் கடத்தப் பட்டு நான்கு நாட்கள் 40 டிகிரி வெப்பத்தில் கைகளில் விலங்குகள் மாட்டப் பட்டுப் பிணைக் கைதியாக இருக்க நேர்ந்தது.அந்தச் சூழ்நிலையிலும் ஒரு டாக்டராக எனது உடலில் நடைபெற்ற மாற்றங்களையே ஒரு பரிசோதனை போலக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எப்படி உடல் தனது இயக்கங்களையே மெதுவாக மாற்றிக் கொள்கிறது என்பதை உணர்ந்து வியந்து போனேன்.

நமக்கென்று ஒரு ரோல் மாடலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவர்களை விடச் சிறப்பாக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே நமது குறிக் கோளாக இருக்க வேண்டும்.பிரச்சினைகளைச் சந்திக்கும் போது அவற்றையே நமது ரோல் மாடல்கள் எப்படி அணுகுவார்கள் என்பதைச் சிந்தித்துச் செயலாற்றினால் எந்தப் பிரச்சினையுமே கையாள்வதற்கு எளிதாக இருக்கும்.

60 வயது வரை உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் வாழும் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.இதுவே நீங்கள் சேவைகள் புரியத் தொடங்கும் தருணம்.

நீண்ட நாட்கள் வாழ்வது ஒரு இனிமையான அனுபவம்.
இன்றும் ஒருநாளைக்கு 18 மணி நேரம் நான் உழைக்கிறேன்,அதன் ஒவ்வொருநிமிடத்தையும் நேசித்தபடியே.

- Dr.Shigeagi Hinohara




Source : http://shanmughapriyan.blogspot.com/2009/06/97.html

Comments