ஓஷோ

 கத்தி, துப்பாக்கி, பீரங்கி, அணுகுண்டு ஆகியவை இருப்பதால்தான் இந்த  உலகம் நிம்மதியற்று இருப்பதாய் நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். அது உண்மை அல்ல. நாம் ஏதாவதொரு கருத்தில் பிடிவாதமாய் இருப்பதால்தான் இந்த  உலகம் அமைதியற்று இருக்கிறது. 

ஒருநாளைக்கு முந்தைய செய்தித்தாளையே பரணில் வீசி விடுகிற நாம் ஆயிரம் ஆண்டு சிந்தனைகளை கட்டி  அழுது கொண்டிருக்கிறோம்.அதற்காக சக மனிதர்களை பகைக்கிறோம்;வெறுப்பை வளர்க்கிறோம்;ஏசுகிறோம்; உயிரை எடுக்கவோ,உயிரை விடவோ தயாராகிறோம்.

ஒவ்வொரு ஞானியும் அல்லது தீர்க்கதரிசியும் அந்தந்த காலகட்டத்தின் புதுமையாய் மலர்ந்து வந்தார்கள். அவர்கள் நேற்றின் சுமையாக  அல்ல; இன்றின் விடியலாக வந்தார்கள். அவர்கள் விடைபெற்றுப்  போனவுடன் நாம் அவர்களையே சுமையாக்கி நிகழ்காலத்தின் முதுகுகளில் வைத்து அழுத்திக் கொண்டிருக்கிறோம்.அவர்களுக்கு விஷம் தந்தவர்களை விட,ஊரை விட்டுத் துரத்தியவர்களை விட,சிலுவையில் அறைந்தவர்களை விட நாம் செய்யும் துரோகம்தான் பெரியது; மன்னிப்பே இல்லாதது.

இதற்காகவே பிறந்து வந்தவர்தான் ஓஷோ. அவர் எதையும் கற்பிக்க  அல்ல; யாவற்றையும் உடைக்கவே வந்தவர். அவர் உடைத்தது தாஜ்மகால்களை அல்ல;நாம் தலைவைத்துப் படுத்திருந்த கல்லறைகளை.அவருடைய செயல் கண்டு எல்லா தீர்க்கதரிகளும்,ஞானிகளும் உள்ளுக்குள் புன்னகைத்திருப்பார்கள்.அவர்கள் மறந்து விட்டுப் போன  ஒன்றை இந்த மனிதன் செய்து முடித்து விட்டான். 

ஓஷோ வின் செய்தி ஒன்றே ஒன்றுதான். அதற்குப் பெயர் 'நிகழ்காலம்'.அவரைப் பொறுத்தவரையில் அதுதான் எல்லாமே. அவருடைய கடவுளுக்குப் பெயர் 'விழிப்புணர்வு'.கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டுதான் அதிகமான மனிதர்கள் 'விழிப்புணர்வைத் தொலைப்பதை'கண்டுபிடித்துச் சுட்டிக் காட்டியவர். அவர். அவர் வேதநூல் 'சகலத்தையும் உடைப்பது' '.சங்பரிவாரங்களும்,தாலிபான்களும் கடப்பாரைகளோடு நிற்கும் 'உடைத்தலுக்கும்'இதற்கும் வேறுபாடு உண்டு. அன்பு பெருக, புன்னகை மலர சகலத்தையும் திரை விலக்கிப் பார்த்தவர்; நமக்கும் காட்டியவர் ஓஷோ.

அவர் காமம் குறித்து மனத்தடையின்றி பேசினார்.உலகத்தின் ஆதி உணர்வு அது. நம்மால் புரிந்து கொள்ள முடியாத,  எல்லாவற்றையும் மறக்கடிக்கிற ஓர் இராட்சச உணர்வு குறித்துப் பேசுவதை விட வாழ்வின் அர்த்தம் வேறென்ன  இருக்க முடியும்?

அவரை எந்த மதவாதியாலும் ஒத்துக் கொள்ள முடியாது. அடிமடியிலேயே கையை வைக்கிற நபரோடு யார்தான் சிநேகம் கொள்ள முடியும்?

ஓஷோவைப் படித்த பிறகுதான் நான் பல முக்கியமான நூல்களைப் படித்தேன்; நான் அந்த  ஆள்.மலைக்கோ,விமானத்திற்கோ நம்மை விரல் பிடித்துக் கூட்டிப் போவார். அந்த  உயரத்தை நாம் வியக்கத் தொடங்கும் அடுத்த நொடியில் இரக்கமே இல்லாமல் நம்மைக் கீழே தள்ளி விட்டு தானும் குதித்து விடுகிற பயங்கரவாதி அவர். 

நீங்கள் இந்துவோ,கிறிஸ்தவனோ,இஸ்லாமியனோ ,பௌத்தனோ,சமணனோ,கம்யூனிஸ்டோ,தலித்தியவாதியோ,காந்தியனோ,பெண்ணியவாதியோ,நாத்திகனோ,பின்நவீனத்துவவாதியோ யாராகவும் இருங்கள். ஆனால், ஓஷோவை விளங்கிப் படித்த பிறகு நீங்கள் அப்படியே இருந்தாலும்  அடுத்தவருக்கான உறுத்தலாக இருக்க மாட்டீர்கள்;அவ்வளவுதான்.


From: https://www.facebook.com/100022586808811/posts/1755768165186060/?mibextid=rS40aB7S9Ucbxw6v

Comments