சுவரஸ்யமான மனிதர்...!

அவருடைய கதைகள் உலகப் புகழ் பெற்றவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படித்து இன்புறத்தக்க இனிய சுவை கொண்டவை. ஒவ்வொரு கதையிலும் ஒரு மறைபொருள் தத்துவம் உள்ளடங்கிக் கிடக்கும்.
அந்தத் தத்துவம் மனித குலத்தை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும், தவறைத் திருத்தவும் கூடிய வல்லமை கொண்டவை. ஆட்டுக்குட்டி அருவி நீரை அருந்திவிட்டதாகப் பழி கூறி, அதைக்கொன்று தின்ற ஓநாய் கதை.
ஒருமுறை சுண்டெலியைக் கொல்லாமல் விட்ட சிங்கத்திற்குக் கைமாறாக, வேடனின் வலையில் சிங்கம் சிக்கிக் கொண்டபோது, வலையைத் தன் பற்களால் கடித்து விடுவித்த சுண்டெலி கதை.
திராட்சைக் குலையைத் தின்ன விரும்பி எம்பி எம்பிக் குதித்துப் பார்த்து, அது கிடைக்காமல் போகவே, “சீ, ச்சீ, இந்தப் பழம் புளிக்கும்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு வீடு திரும்பிய நரியின் கதை,
இதுபோன்ற பல கதைகளை உலகின் எந்த நாட்டு, எந்த மொழிக் குழந்தைகளும் அறிந்திருப்பார்கள். உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி நிற்கும். அந்தக் கதைகளின் வலிமைதான் என்ன!
கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் ஏராளமானோரால் படிக்கப்பட்டு வருபவை அவரது கதைகளே! முந்நூறுக்கும் மேற்பட்ட கதைகளைச் சொல்லிச் சென்றிருக்கிறார் அவர்.
அத்தனையும் குட்டிக் கதைகள்! அவற்றில் பெரும்பாலானவை விலங்குகள், பறவைகள், பிராணிகள் ஆகியவற்றைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு பின்னப்பட்டவை. மனிதர்களைக் கொண்டு அவர் சொன்ன கதைகள் மிகக் குறைவுதான்.
அவர் சொன்ன கதைகள் எல்லாம் மக்கள் கூடும் நாற்சந்திகளிலும் சந்தைகளிலும் ஆலய வாசல்களிலும் மக்களிடம் நேரடியாகச் சொன்னவைதான். அவர் சொன்ன கதைகளை அவர் எழுதி வைக்கவும் இல்லை.
அவர் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது இரண்டுபேர் சண்டைபோட்டுக் கொண்டிருப்பார்கள். உடனே அவர், அவர்கள் சண்டையைத் தடுத்து நிறுத்தி, அப்போதே, அங்கேயே, அவர்களிடம் ஒரு அழகான குட்டிக் கதையைச் சொல்வார்.
கதையைக் கேட்ட அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, சமாதானமாகச் சென்று விடுவார்கள். இப்படி அவர் பல நீதிக் கதைகளைக் குட்டிக் கதைகளாகக் கூறி, நாட்டில் நடந்த கலகங்கள், சண்டைகள் முதலியவற்றை எல்லாம் அடக்கியிருக்கிறார்.
அரசுக்கும் மக்களுக்கும் பல போராட்டங்களை, கிளர்ச்சிகளை சமரசம் செய்து வைத்துள்ளார் அவர். அவர் சொன்ன கதைகள் ஒவ்வொன்றையும் மக்கள் மனதில் பதித்து வைத்து, அவர் காலத்திற்குப் பின்னாலும் சந்ததிகளுக்குச் சொல்லி வந்துள்ளார்கள்!
அவர் ஆரம்ப காலத்தில் ஒரு அடிமையாகவே இருந்தார். எனினும் நெடுநாட்கள் அவர் அடிமை வாழ்வு வாழவில்லை. அவரது அறிவாற்றலையும் மக்கள் அவர் மீது காட்டும் ஈடுபாட்டையும் கண்டு அவரது எஜமானர் விரைவிலேயே அவரை விடுதலை செய்து விட்டார்.
மனிதர்கள் கூடும் இடங்களில் மனிதர்களின் குறைபாடுகள், சுயநல நிகழ்ச்சிகள், பேராசை, பொறாமை போன்ற இழி குணங்களை மனிதர்களையே கதாபாத்திரங்களாகக் கொண்டு சொன்னால் அவர்கள் கோபப்படக் கூடும்!
கருத்தைப் புறக்கணித்து, கதையை மட்டும் பார்ப்பார்கள் என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். அதனால்தான் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைப் பாத்திரங்களாகக் கொண்டு கதைகளைக் கூறி வந்திருக்கலாம்!
மக்களும் அவருடைய கதைகளை ரசித்துக் கேட்டு, கதை மூலம் அவர் கூறவரும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு சிந்தித்து செயல்பட்டு வாழ்ந்திருப்பார்கள் என்று கருதத் தோண்றுகிறது.
அவர் இறந்து முன்னூறு ஆண்டுகள் கழிந்த பிறகே, அவர் கூறிய கதைகளை ‘பாப்ரியஸ்’ என்ற கிரேக்க ஆசிரியர் ஒருவர் முதன்முதலாகத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் மூலமே அவருடைய கதைகள் லத்தீன், பிரெஞ்சு முதலிய மொழிகளுக்கும் சென்றது.
பிரெஞ்சிலிருந்து இந்தக் கதைகளை மொழி பெயர்த்து, 1845ஆம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டார்கள். இங்கிலாந்தில், ‘காக்ஸ்டன்’ என்பவர்தான் முதன்முதலில் அச்சு இயந்திரத்தை அமைத்து, நூல்கள் தயாரித்து வெளியிடலானார்.
அந்த காக்ஸ்டான், அவரது கதைகளையும் அச்சிட்டு வெளியிட்டார். அந்த நூலின் ஒரே ஒரு பிரதி மட்டுமே இப்போது உள்ளது. அதுவும் பிரிட்டிஷ் மியூசியத்தில் பார்வையாளர்கள் காட்சிக்காக ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது.
அவர் வாழ்ந்தது கிரேக்க நாட்டில், அவர் அப்படி வாய்வழியாக பல நூற்றாண்டுகளைக் கடந்து, வாழ்ந்து, பிறகு அந்தக் கதைகள் அச்சு வாகனம் ஏறி, இன்றும் உலக மக்களிடம் உலா வந்த வண்ணம் உள்ளன.
அவர் சொன்ன கதைகளும் அவரது தாய் மொழியான கிரேக்க மொழியில்! ஏசு கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் அவர். அவரது காலம் கி.மு.620 என்று தெரிகிறது!
அவர்தான் ஈசாப். அவர் கிரேக்க நாட்டில் எந்த ஊரில் பிறந்தார் என்பது இன்னமும் அறியப்படவில்லை. அந்த நாட்டில் சுமார் ஆறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் அவர் பிறந்தது எங்கள் ஊரில்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Comments

  1. ஈசாப் கதைகள் புத்தகம் ஒன்று எங்கவீட்டிலும் இருக்கிறது... :)

    உங்கள் பதிவின் பேக்ரவுண்ட்கலரை மாற்றுங்கள்.. பதிவைப்படிக்க எளிமையான வெளிர் நிறங்களை பேக்ரவுண்டிலும் அடர்நிறங்களை எழுத்துக்களூம் இடுவது சிறப்பு..
    வேர்ட் வெரிபிகேஷனையும் எடுக்கவும்..

    ReplyDelete
  2. தாங்க‌ள் வ‌ருகைக்கு ந‌ன்றி , இதுதான் என‌து முத‌ல் முய‌ற்சி, என‌வே தாங்க‌ள் சொன்ன‌ கருத்துக்க‌ளை செய‌ல்ப‌டுத்துவ‌து எப்படி என்ப‌தையும் என்பதையும் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்..

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.