சுவாரஸ்யமான போட்டி.. !!

ஒரு போட்டி நடந்தது. என்ன போட்டி தெரியுமா? ஒரே மூச்சில் நூறு இட்லிகளைச் சாப்பிட வேண்டும். பல பேர் பாதியிலேயே விலகிக் கொண்டார்கள். ஒருவன் மட்டும் விடாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். இவன் சாப்பிடச் சாப்பிட... இன்னொருவன் ஒரு கரும்பலகையில் சாக்பீஸால் ஒரு இட்லிக்கு ஒரு கோடு வீதமாகப் போட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் கரும்பலகையில் இடமில்லை. அதைப் பற்றி, சாப்பிடுகிறவனுக்குக் கவலை இல்லை. கோடு போடுகிறவனுக்குத்தான் கவலை! சாப்பிடுகிறவன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கோடு போடுகிறவன் கரும்பலகையைக் கவலையோடு பார்த்தான். 99 கோடுகள் போட்டாயிற்று. இன்னொரு கோட்டுக்கு இடமில்லை. யாருக்கும் தெரியாமல் ஏற்கெனவே போட்ட சில கோடுகளை அழித்துவிட்டு... மறுபடியும் தொடர்ந்து போட ஆரம்பித்தான். ‘நூறு இட்லிகள், சாப்பிடும் போட்டி என்பது நூறையும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. சாப்பிடுகிறவனைப் பரிதாபமாகப் பார்த்தான் கோடு போடுகிறவன். சாப்பிடுகிறவன் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவனுக்குக் கோடுகளைப் பற்றிக் கவலை இல்லை. ஆகவே, அவன் அண்ணாந்து பார்க்கவே இல்லை. இது கோடு போடுகிறவனுக்கு வசதியாகப் போயிற்று சாமர்த்தியமாக ஒரு கோட்டை அழிப்பது... மறுபடி அதன் மீதே இன்னொரு கோடு போடுவது... இப்படியே சமாளித்துக் கொண்டிருந்தான். அந்த சாப்பாட்டு ராமன், இது தெரியாமல் மதியம் வரை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கடைசியாக ஒரு கட்டத்தில் அவன் ஏதோ யோசிக்க ஆரம்பித்தான். கோடு போடுகிறவன் கேட்டான்: என்ன யோசிக்கிறே..? நீ செய்யறது எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு! நான் ஒழுங்காத்தானே கோடு போட்டுக்கிட்டு வர்றேன்! சாப்பிடுகிறவன் சொன்னான்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... எல்லாக் கோட்டையும் அழிச்சுடு... மறுபடியும் முதல்லேயிருந்து வரலாம்!






நண்பர்களே... அதிர்ச்சியடையாதீர்கள்.







எல்லையில்லாமல் இட்லிகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிற அந்த வயிறு யார் தெரியுமா? அதன் பெயர்: பேராசை!







சாக்ரடீஸ் : பேராசைக்காரனுக்கு உலகமெல்லாம் தந்தாலும்கூட பசி தீராது. மனத் திருப்தியுள்ளவனுக்கு ஒரு துண்டு ரொட்டியே போதுமானது!


Note :இன்னொரு இடத்தில் படித்தில் பிடித்து ‍ இறக்குமதி சரக்கு

Comments