ஆம்பிளை அழக்கூடாது!! தெரியுமா..


ஏழெட்டு வயது சிறுவனாக இருந்தபோது என் மனதில் ஒரு அசைக்க முடியாத எண்ணம் வேரூன்றியிருந்தது. 'ஆம்பிளைப் பிள்ளை அழக் கூடாது' என்பதுதான் அது. அந்தச் சின்ன வயதில் அப்படி ஒரு 'நல்லொழுக்கத்தை' என்னிடம் விதைத்தது யாரோ தெரியாது. ஆனால், அதை நான் மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தது மட்டும் உண்மை.

'என்ன துன்பம் வந்தாலும் அழக் கூடாது' என்ற வைராக்கியம் என்னிடம் உச்சத்தில் இருந்தபோதுதான் அந்த மிகப் பெரும் சோகம் நேர்ந்தது. பிறந்தது முதல் என்னை மார்மீதும் தோள்மீதும் தூக்கி வளர்த்த என் பாட்டி, திடீரென்று மரணம் அடைந்து விட்டார். எப்போதும் ஒரு வித மெல்லிய புன்னகையை மட்டுமே இதழ்களில் தவழ விடும் என் அப்பா, ஓவென்று கதறி அழுத காட்சியை அன்றுதான் நான் முதன்முதலில் பார்த்தேன். அவ்வப்போது பாட்டியைப் பற்றி என்னிடம் (எனக்குப் புரியாது என்ற தைரியத்தில்) குறை சொல்லி புலம்பித் தள்ளும் அம்மாவும் கூட கண்ணீர்க் கடலில் மூழ்கியிருந்தார்.

ஆனால், என் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. நான் வர விடவில்லை. 'பாட்டி!' என்று என் உள்ளம் பதைபதைக்கும்போதெல்லாம், 'ஆண் பிள்ளை அழக் கூடாது.. ஆண் பிள்ளை அழக் கூடாது' என்று கிளிப்பிள்ளை போல் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

ஒரே பேரன் என்ற முறையில் அரிசியிடுதல் முதல் கொள்ளியிடுதல் வரை என்னைத்தான் கை பிடித்துச் செய்ய வைத்தார்கள். அப்போதும் கூட அழுதுவிடக் கூடாது என்ற தவிப்பும் இறுக்கமும்தான் எனக்குள் இருந்ததே தவிர, பாட்டி பற்றிய நினைவுகள் துளியும் இல்லை.

இரண்டு நாட்கள் கடந்தது. எங்கள் உறவினர்களில் பாட்டியின் இறப்புக்கு வர முடியாத மூதாட்டி ஒருவர் ஊரில் இருந்து வந்திருந்தார். "அவ சாவுல கூட இவன் அழலையா" என்று ஆச்சர்யமான அவர், "அழக்கூட தெரியாத இந்தப் பிஞ்சுப் பிள்ளையை விட்டுப் போக உனக்கு எப்படியம்மா மனசு வந்துச்சு!" என்று ஆரம்பித்தார். அநேகமாக அவர் என் பாட்டியின் சக வயது தோழியாக இருக்க வேண்டும். எங்கள் குடும்பம் பற்றி, பாட்டி பற்றி, ஏன்.. என்னைப் பற்றி கூட அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது."குடும்பத்துக்கு ஒரே வாரிசு.. இவன் முகத்தைப் பார்த்துத்தான் உயிரைப் புடிச்சுக்கிட்டுக் கெடக்கேன்னு சொல்லுவாளே.. இப்போ இந்த முகத்தை அலங்கரிச்சுப் பார்க்க அவ இல்லையே" என்றெல்லாம் என்னை கட்டிக் கொண்டு அவர் அழவும் எனக்குள் ஏதோ ஒன்று உருகத் தொடங்கியது.

அம்மாவையும் அப்பாவையும் அதட்டும் சக்தியாக.. எனக்கு மட்டும் பூனைக் குட்டியாக.. திகட்டத் திகட்ட பாசம் வார்த்த ஒரு ஜீவனின் இழப்பு எனக்கு அப்போதுதான் உறைத்தது.என் மழலைப் பொய்களுக்கு புருவம் உயர்த்திய ஒரே நபர் பாட்டிதான். என் உறக்கத்துக்காகவே புதுப்புது 'சிங்கம் கதை'களுக்கு சிருஷ்டி கர்த்தாவானவர் அவர். என் ஐஸ்கிரீம் செலவுகளுக்கென தாத்தாவின் போட்டோவுக்குப் பின்னால், வங்கி நடத்தியவர். 'டாக்டர் ஆகு.. என்ஜினீயராகு..' என்ற பெற்றோரின் குரல்களுக்கு மத்தியில், 'ரொம்ப படிச்சா மூளை குழம்பிடும்' என்றபடி, முந்தானையால் என் முகம் துடைத்தவர்.

அந்த இடுங்கிய கண்களின் இணக்கம்..முன் பற்கள் இல்லாத அந்த இதழ்களின் எச்சில் முத்தம்..அய்யோ பாட்டி!நான் அழுதுவிட்டேன். உறவினர் விக்கித்துப் போக, அம்மாவும் அப்பாவும் பிரம்மித்து நிற்க, யார் சொல்லுக்கும் அடங்காமல் நான் அழுது கொண்டே இருந்தேன். என் பாட்டியின் மீது நான் வைத்திருந்த அன்பை உலகுக்கே உரக்கச் சொல்லிவிட்டதாக ஒரு உணர்வு வந்தது. அமைதி வந்தது. நிம்மதி வந்தது.அன்றிலிருந்து

இன்று வரை இயல்பான உணர்ச்சிகள் எதையும் நான் மறைத்ததில்லை. சிரிப்பும் அழுகையும் எல்லா மனிதர்களுக்கும் பொது. ஆண் பெண்பேதமெல்லாம் அதில் கிடையாது என்பதை திடமாக நம்பினேன். எனக்கும் ஒரு மகன் பிறந்த போது, நான் அவனுக்குச் சொல்லி வளர்த்த முதல் அறிவுரை இதுதான்.. 'எந்தத் தயக்கமும் இல்லாமல் கண்ணீரை வெளிப்படுத்தத் துணிபவன்தான் உண்மையான ஆண் பிள்ளை!'

சந்திரன்.!
நன்றி : விகடன்

Comments