உலக சினிமா: 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' (The Pursuit of Happyness). தன்னம்பிக்கை + விடாமுயற்சி=வெற்றி.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் படம் துவங்குகிறது. மருத்துவமனைகளுக்கு உபயோகப்படும் ஒரு கருவி விற்கும் விற்பனை பிரதியாக கிறிஸ்.நர்ஸ் ஆக வேலை பார்க்கும் மனைவி. சீன குடும்பம் நடத்தும் ஒரு விலை குறைந்த டே கேர் செல்லும் மகன் என அளவான மத்திய தர குடும்பம். இருந்தாலும் வறுமையால் அக்குடும்பத்தில் பிரச்சனை வருகிறது. வாடகை குடுக்காததால் வீட்டுக்காரனின் நச்சரிப்பு. நோ பார்கிங் இடத்தில் காரை பார்க் செய்ததால் அடிக்கடி கிடைக்கும் அபராதம் என வீட்டில் இருக்கும் பண பிரச்சனை அழகாக காட்டப் படுகிறது.
தான் காரை பார்க் செய்யும் இடத்தை இன்னொருவருக்கு விட்டு கொடுத்து நட்பு வளர்க்கிறான் கிறிஸ். அவர் டான் விட்டர் என்னும் பங்கு சந்தை வர்த்தக அலுவலகத்தில் வேலை பார்ப்பதை அறிந்து அங்கு வேலை செய்யும் மக்கள் கோட், சூட், டை என நடைபோடுவதை பார்க்க... தானும் அவ்விடத்தில் வேலை செய்ய ஆசை படுகிறான். அவருடன் ஒரு டாக்சி யில் செல்லும்போது சிறுவர்கள் விளையாடும் க்யுப் எனும் விளையாட்டு பொருளை அவர் சரியாக பொருத்த முடியாமல் தவிக்க அதனை எளிதாக பொருத்தி அவன் சிறந்த மூளைக்காரன் என நிரூபிக்கிறான்.
அவரிடமே டான் விட்டர் அலுவலகத்தில் தானும் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும் என கேட்க அவரோ வருட வருடம் இலவசமாக அவர்கள் தரும் ஆறு மாத பயிற்சி எடுத்துக்கொண்டு அவர்களின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அந்த அலுவலகத்தில் வேலை என்ன சொல்கிறார்.
பலவித சிந்தனை செய்த பின்பு அதற்க்கு ஒத்து கொள்கிறான் கிறிஸ். மறுதினம் அவனை நேர்முக தேர்விர்ற்கு வரும்படி அழைப்பு வருகிறது. அன்று வீட்டுக்காரன் வாடகைக்கு பிரச்சனையை செய்வதால் தானே அந்த வீட்டுக்கு பெயிண்ட் அடித்து தருவதாக கூறுகிறான் கிறிஸ். அதன்படி அவன் ஒரு ஜீன்ஸ் மட்டும் அணிந்து ஒரு ஜிப் அறுந்து போன ஒரு ஜெர்கின் போட்டு கொண்டு பெயிண்ட் அடித்து கொண்டிருக்கும் வேளையில் போலீஸ் வருகிறது.
அவன் 'நோ பார்கிங்' இடத்தில் தனது காரை எப்போதோ நிறுத்தியதற்கு அபராதம் விதித்தும் அவனால் செலுத்த படாததால் அவனை கைது செய்து ஜெயிலில் வைக்கிறார்கள். ஒரு இரவு சிறையில் கழித்த பின்பு காலை நேர்முக தேர்விற்கு நேரமாகி விட்டதால் அதே உடையுடன் சாயம் போன ஜீன்சும் ஜிப் அறுந்து போன ஜெர்கினும் அணிந்தபடியே நேராக டான் விட்டர் அலுவலகம் சென்று தேர்விற்காக காத்திருக்கிறான். கிட்டத்தட்ட சுவர்களுக்கு சுண்ணாம்பு பூசுபவன் தோற்றத்தோடு இருக்கும் அவனை அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் ஏளனமாக பார்க்கிறார்கள்.நேர்முக தேர்வில் அவன் கூறுகிறான்.
'நான் இப்போது இருக்கும் தோற்றத்திற்காக எப்படியாவது ஏதாவது ஒரு பொய்யை சொல்லி உங்களை ஏமாற்றி விடலாம் என நினைத்தேன். எனக்கு ஒரு பொய்யும் தெரியவில்லை, எனவே உண்மையை சொல்கிறேன். நோ பார்கிங் இடத்தில் எனது காரை நிறுத்தியதற்காக என்னை போலீஸ் கைது செய்து நேற்று இரவு முழுவதும் சிறையில் இருந்தேன். இன்று காலை நேராக சிறையில் இருந்து வருகிறேன். '
அப்போது தேர்வு செய்யும் குழுவில் இருக்கும் ஒருவர் கேட்கிறார். 'நீ நேர்முக தேர்வில் இருந்து உன்னிடம் ஒருவன் இப்படி சட்டை இல்லாமல் தேர்விற்கு வந்தால் அவனை பற்றி நீ என்ன நினைப்பாய்?'
அவன் கூறும் பதில்.' அவன் நல்ல பான்ட் அணிந்திருக்கிறான் என்று தான் நினைப்பேன்'.
அவன் தேர்வாகி விடுகிறான்.
ஆறுமாதம் சம்பளம் இன்றி படிக்க போவதை அறிந்த அவன் மனைவி வறுமையால் அவனை விட்டு பிரிந்து நியூ யார்க் நகரம் சென்று விடுகிறாள். மகனையும் தன்னையும் சுமந்து கொள்ளும் பொறுப்பு அவனுக்கு வருகிறது.
ஒரு நாள் நாடு இரவில் வாடகை கட்டாததால் நடு இரவில் வீட்டுக்காரனால் துரத்தப்படுகிறான் கிறிஸ். ஒரு விடுதியில் குறைந்த வாடகைக்கு அறை எடுத்து தங்குகிறான்.
அவனது படிப்பு துவங்குகிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த மருத்துவ இயந்திரத்தை விற்க அலைகிறான். மகனையும் பார்த்துகொள்கிறான். அவனும் படிக்கிறான். இடையில் அவனிடம் இருக்கு இரண்டு இயந்திரங்களில் ஒன்று களவு போகிறது. அதனை பெரும் அலைச்சல்களுக்கிடையில் கண்டுபிடிக்கிறான். இருக்கிற காசும் தீர்ந்து போக.. நடு தெருவுக்கு வருகிறான். எங்கு செல்ல என தெரியாமல் ரயில் நிலையத்துக்கு வருகிறான். அங்குள்ள ஒரு கழிப்பிடத்தினுள் அங்குள்ள டிஷ்யு பேப்பெர்களை விரித்து கண்ணீருடன் தன் செல்ல மகனுடன் அந்த இரவை கழிக்கிறான்.
அமெரிக்காவில் வீடற்றவர்களுக்கு (இந்திய மொழியில் சொல்வதானால் பிச்சை காரர்களுக்கு) என்று விடுதிகள் உண்டு. அதற்க்கு பெரிய ஒரு வரிசையில் நிற்க வேண்டும் இரவு மட்டும் தங்கி கொள்ளலாம். மறுநாள் அதே விடுதியில் அதே இடம் கிடைக்கும் என சொல்ல முடியாது. வேறொரு விடுதியில் வேறு இடம் கிடைக்கலாம்.
அப்படி பட்ட இடங்களில் பிச்சை காரர்களோடு பிச்சை காரனாய் தனது மகனுடன் அங்கு இரவுகளை கழிக்கிறான் கிறிஸ். இரவுகளில் அவ்விடத்தில் வரும் சொற்ப வெளிச்சத்தில் படிக்கிறான். வார விடுமுறைகளில் தேவாலயங்கள் சென்று அங்கு கிடைக்கும் உணவை உண்கிறார்கள் இருவரும். அவ்வப்போது பூங்காக்கள் சென்று மகன் விளையாட பணிக்கிறான்.
தேர்வு நாள் வருகிறது. தேர்வெழுதி விட்டு வெளியே வருகிறான். ஒரே ஒருவன் மட்டுமே தேர்வு செய்யபடுவான் என்கிறார்கள். அந்த ஒருவனாக இல்லாவிட்டால் அவனது வாழ்வே கேள்விகுறி ஆகி விடும்.
அவனை ஒரு நாள் திடீரென அழைக்கிறார்கள். அவன் தேர்வாகிவிட்டத்தை சொல்ல அவன் கண்களில் கண்ணீர்.. படம் பார்க்கும் நமக்கோ அவன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நிழலாடுகிறது. அற்புதமான நடிப்பை இங்கு வெளிப்படுத்துகிறார் கிறிஸ் ஆக நடித்திருக்கும் வில் ஸ்மித். அவரின் வெற்றி நமது வெற்றியாக நமது கண்களும் பனிக்கிறது
படத்தில் ஒரு வசனம். கிறிஸ் தனது மகனிடம் சொல்வதாக வருகிறது.'உன்னால் முடியாது என யார் கூறினாலும் அதை நம்பாதே. உனது திறமை எது என அவர்களுக்கு தெரியாது. உன்னால் எதுவும் முடியும் என நம்பு. உன் லட்சியத்துக்கு குறுக்கே எது வந்தாலும் நீ நில்லாதே. உனது இலக்கை நோக்கி முன்னேறு.'
வில் ஸ்மித்தின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் நிஜத்திலும் வில் ஸ்மித்தின் மகனே. புலிக்கு பிறந்தது என கூறப்படும் பழமொழி போல மிக அற்புதமாக நடித்திருக்கிறான் அந்த சிறுவன். வில் ஸ்மித்தின் திரை வாழ்கையில் இப்படம் ஒரு மைல் கல். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்டு பாரஸ்ட் விடக்கர் என்ற சக நடிகனிடம் தோற்று விட்டார்( பாரஸ்ட் விடக்கர் நடித்த படம் இடி அமீன் வாழ்வை சொல்லும் 'த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து மிக அற்புதமான நடிப்பு).
இருந்தாலும் தோல்வியே வாழ்க்கையாக இருக்கிறது என உடைந்து போகும் அனைத்து இதயங்களுக்கும் ஒரு உந்து சக்தி இந்த படம்.
Comments
Post a Comment
கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!
use tamileditor.org for post you comments in TAMIL.