உலக சினிமா :- த வே ஹோம் (The way home) - உறவுப் பாலம்




'தொலைந்து போனவர்கள்' கவிதையை நான் எழுதிக்கொண்டிருந்தபோது வயதான கிராமத்து பாட்டிக்கும், நகரத்தில் பிறந்து வாழ்ந்த அல்ட்ரா மாடர்ன் பேரனுக்கும் உள்ள பாச பிணைப்பை கூறும் தென் கோரிய மொழி திரைப்படமான 'த வே ஹோம்' (The way home) பற்றி எழுத தோன்றியது. அதற்க்காக எனது குறுந்தகடு கருவூலத்திலிருந்து மறுபடி அத்திரை காவியத்தை காண நேர்ந்தது. எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத.. கண்களில் குறைந்த பட்சம் ஒரு சொட்டு கண்ணீர் வரவழைக்கும் திரைப்படம் தான் 'தி வே ஹோம்'.

உலக திரைப்படங்கள் என கூறி கொண்டு நம்மவர்கள் 'சிவாஜி' என்றும் 'தசாவதாரம்' என்றும் கோடிகளை கொட்டி கமர்ஷியல் குப்பைகளை அளித்து கொண்டிருக்கும்வேளையில்..உலக அளவுக்கு திரைப்படம் எடுக்க சிறந்த திரைக்கதை போதும் என நிரூபிக்க வந்த படம். (படத்தின் கதை நடக்கும் இடம் தென் கொரியாவின் மிக பின் தங்கிய ஒரு கிராமம். நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள்.) நம் ஊரில் இதே கதையை திரைப்படமாக எடுக்க ஒரு கோடி கூட தேவை இருக்காது.

முதல் காட்சி, தென் கொரியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு ரயிலிலும் பின்னர் ஒரு ஓய்ந்து போன ஊர்தியிலும் ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண்ணும் அவளை விட பல மடங்கான அல்ட்ரா மாடர்ன் சிறுவனும் செல்கின்றனர். அந்த கிராமத்தில் பஸ் நின்றதும் அந்த தாய்க்கும் சிறுவனுக்கும் சண்டை வருகிறது. அந்த சிறுவன், தன் தாயை எட்டி உதைக்கிறான். அதன் மூலம் அவன் எவ்வளவு குறும்புக்கார சிறுவன் என காண்பிக்க படுகிறது. அடுத்து அவர்கள் அந்த மலை கிராமத்தில் நடந்து சென்று ஒரு சிறு பாடவதியான வீட்டை அடைகிறார்கள். ஒரு சிறு அறை மட்டுமே இருக்கும் குடிசை வீடு அது. முகத்தின் வரிகள் மிகுந்து அவளின் வயதை சொல்கிறது பாட்டியின் முகம் . அவளுக்கு குறைந்தது ஒரு தொண்ணூறு வயது இருக்கலாம். தான் வேலை தேடி கொண்டிருப்பதாகவும் அதுவரை தன் பிள்ளை அந்த வாய் பேச முடியாத பாட்டியின் பராமரிப்பில் இருக்கவும் விட்டுவிட்டு அந்த தாய் கொரியா நகரத்திற்கு சென்று விடுகிறாள். பாட்டியை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் பொய் விடுகிறது சிறுவனுக்கு. பாட்டியின் உணவை உண்ணாமல் தான் கொண்டு வந்திருக்கும் டப்பா உணவுகளையே உண்ணுகிறான் அவன். எந்த நேரமும் வீடியோ கேம் இல் மூழ்கி இருக்கும் அவன்.. பாட்டியை கிறுக்கு என்றும் ஊமை என்றும் வீட்டு சுவரில் எழுதி வைக்கிறான். வயதான பாட்டி துணி தைக்க ஊசியில் நூலை கோர்த்து தர சொல்லி பேரனின் உதவியை நாடுகிறாள். மிகுந்த சலிப்பிற்கு இடையே அவன் கோர்த்து தருகிறான். தான் விளையாடிகொண்டிருந்த் வீடியோ கேம் இன் பாட்டரி தீர்ந்து போனதால், வேறு பாட்டரி வங்கி தரும்படி பாட்டியிடம் கேட்கிறான். பாட்டிக்கு புரியாததால் பைத்தியம் செவிடு என திட்டுகிறான்.

இதனிடையே ஒரு சிறுமி 'மாடு மாடு' என கத்த துரத்தி கொண்டு வரும் மாட்டிடம் இருந்து வழி மாறி ஓடி தப்பிக்கிறான் இன்னொரு சிறுவன். அந்த சிறுமியின் பால் ஈர்ப்பு வருகிறது நம் கதாநாயக சிறுவனுக்கு.அந்த சிறுமியை நன்பியாக்கி கொள்ள தன்னை அழகாக்கி கொள்ள, பாட்டியிடம் முடி வெட்டி விட சொல்கிறான். முடி வெட்டும் போது தூங்கி விடும் அவன், கண் விழித்து பார்க்கும் போது தலையை ஒட்ட வெட்டி விட்டுள்ளது கண்டு கலக்கம் கண்டு அழுகிறான். பாட்டியை திட்டுகிறான்.

கென்டக்கி ப்ரய்ட் சிக்கன் வேண்டும் என சைகையில் கேட்க மழைக்குள் அந்த தள்ளாத வயதில் மழையின் கீழ் நடந்து வந்து அவனுக்காக கோழி வாங்கி அவித்து தனக்கு தெரிந்த வரையில் சமைத்து கொடுக்க, அது கென்டக்கி ப்ரய்ட் சிக்கென் அல்ல என சாப்பிட மறுத்து விடுகிறான். பின்னரவில் பசி எடுக்க அதே சிச்கேனை சாப்பிட்டு பசி ஆருகிறான்.. பாட்டி தான் வளர்த்து வந்த செடியில் பறித்த காய்கறிகளை விற்க அருகில் இருக்கும் சந்தைக்கு பேரனையும் கூட்டி கொண்டு பஸ் இல் ஏறி செல்கிறாள். அங்கு அவனுக்கு காலணி வாங்கி தருகிறாள். அப்போது பேரன் இனிப்பு மிட்டாய் வங்கி தர சொல்கிறான். இருக்கிற பணம் எல்லாம் செலவு செய்து அவனுக்கு வாங்கி தந்து அவனை பஸ்ஸில் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். பாட்டியின் கிராமத்துக்கு வந்து சேரும் பேரன்.. பாட்டியை காணாது பஸ் நிறுத்தத்திலேயே அமர்ந்து பாட்டி வரும் பஸ் நோக்கி காத்திருக்கிறான். எந்த பஸ்சிலும் வராது போன பாட்டி நடந்து வருவதை காண்கிறான். அப்போது தான் பஸ்சுக்கு காசு இல்லா விட்டாலும் இனிப்பு வாங்கி தந்த பாட்டி நடந்தே வந்த அன்பை எண்ணி உருகுகிறான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சண்டை போட்டபடியே பாட்டியிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறான் பேரன்.

அவனுடைய அம்மா வந்து அவனை அழைத்து செல்லும் நாள் வருகிறது. பாட்டியை பிரிய மனமின்றி அவன் செல்லும் நாளின் முதல் நாள் இரவு.. பாட்டிக்கு ஏகப்பட்ட நூல்களில் ஊசிகள் கோர்த்து வைக்கிறான். பாட்டிக்காக தானே வாழ்த்து அட்டைகள் செய்து அதில் அனுப்புனர் பகுதயில் பாட்டி என்றும் பெறுனர் பகுதியில் அவன் பெயரை எழுதி ஒவ்வொரு மாதமும் தனக்கு அனுப்புமாறும் அப்போது அவள் நலமாக இருக்கிறாள் என தான் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறான். அவன் ஊருக்கு புறப்பட்டு செல்லும் நாளில் நம் மனம் கனக்க... பேரன் மன்னிப்பு கேட்டபடி பாட்டியை பிரிய...அந்த மலை கிராமத்தில் கூன் போட்டபடி குச்சியை வைத்து மெல்ல ஏறும் பாட்டியை காட்டியபடி படத்தை முடிக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியும் நம்மையே பிரதிபலிப்பது போல நகர்வது தான் இப்படத்தின் வெற்றி. படத்தை பார்க்கும் ஒவ்வொரு பேரனும் தனது தாத்தா பாட்டியை நிச்சயம் நினைத்து கொள்வான். இப்படத்தை இயக்கியவர் லீ ஜியாங் ஹயாந்க் (Lee Jeong-hyang) என்ற பெண் இயக்குனர்.2002 இல் சூப்பர் ஹிட்டான இத்திரைப்படம் உலகெங்கும் வாழும் பாட்டிகளுக்காக எடுக்கப்பட்டது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஜீடோங்க்மா என்ற குக்கிராமத்தில், அந்த கிராமத்தில் வாழும் மனிதர்களை கொண்டே எடுக்கப்பட்டது. அந்த பாட்டியும் அவ்விடத்தில் வாழ்ந்தவர் தான். பெரிய நடிகர்கள் இன்றி வெறும் பாட்டி பேரனின் பாசப்பிணைப்பையும் அவர்களுக்குள் ஏற்ப்படும் உறவு பாலமும் மட்டும் பேசுகிற படம் பெரும் வெற்றியும் பெற்றது. படத்தில் பெரும் ஒப்பாரி காட்சிகளோ சோக காட்சிகளோ இல்லாமல் இருந்தாலும்.. படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு சொட்டு கண்ணீர் விடப்போவது நிஜம்.
Source : http://nilamukilan.blogspot.com/2008/08/way-home_18.html

Comments