அழகுக் குறிப்புகள்!!!


வேப்பிலை (மார்கோசா, வேம்பு) - விஜயகுமாரி பாஸ்கரன்
வேம்பு இந்தியா முழுவதும் அனைவரும் நன்கு அறிந்த மரம். தென்னிந்திய மக்களால் தெய்வமாய் போற்றப்படும் இதில் மலை வேம்பு, சந்தன வேம்பு என பல வகைகளும் உள்ளன.
இம்மரம் இந்தியாவிலும், பர்மாவிலுமே பெருமளவு காணப்படுகிறது. இதன் காய் வெளிர் பச்சை நிறத்தில் நீள உருளை வடிவில் 2 செ.மீ நீளமுள்ளதாக இருக்கும். காய் வெள்ளை நிறப் பாலுடையது. காய் கனிந்து, மஞ்சள் நிறமுடைய சதைப்பற்றுடைய கனியாக மாறுகிறது. பறவைகளுக்கு பிடித்தமான பழம் இது. இதன் இலை, காய், பூ, அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
நம் நாட்டின் சாலையோரங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. வீடுகளிலும், கோயில்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. வேப்ப மரத்தால் சுகாதார கேடுகளும், முருங்கை மரத்தால் பசிப் பிணியும் வராமல் தடுக்கலாம் என்பது நம் முன்னோர் கருத்து. வேப்பமரத்தின் அடியில் அமர்வதும், அதன் மேல் பட்டு வரும் காற்றை சுவாசிப்பதும் மக்களின் மனநிலையை சாந்தமாக்கும். மனம் அமைதி பெறும்.
இதன் உலர்ந்த தண்டின் பட்டைகள், இலைகள், வேர்ப்பட்டைகள் மருந்து தயாரிக்கப் பயன்படுகின்றன. இலைகள் கசப்பு சுவை உடையது. தோல் வியாதிகளுக்கும், பரு, கொப்புளங்கள் இவற்றை குணப்படுத்துவதில் கிருமி நாசினியாகவும் விளங்குகிறது.
அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் சிறந்த கிருமி நாசினியாக சேர்க்கப்படுகிறது. இதன் இலைகள் மற்றும் வேர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியும், தோல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தியும் கொண்டவை. வைரஸ், பூஞ்சை, காளான் போன்ற கிருமிகளுக்கு எதிரானவை.
காற்றில் கலந்து மிதந்து வரும் நுண் கிருமிகளால் வரும் நோய்கள், வேம்பின் இலையால் விலகும். வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக்களுக்குத் தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் அனைத்தும் உடைந்து காயத் தொடங்கும். வேப்பிலையால் கிருமிகள் எல்லாம் செத்து மடிந்து மண்ணோடு மண்ணாகிவிடும். இது சீதளத்தை விரட்டி உடம்பிற்குத் தேவையான சீதோஷ்ணத்தைக் கொடுத்து சமச் சீராக உடலை வைத்துக் கொள்ளும்.
ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைபோல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர அம்மை வடு மாறும். உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய்க்கு இதன் இலைச்சாறு நல்ல மருந்து.
பசி குறைந்து உடல் மெலிந்திருப்பவர்கள் வேப்பிலை ஒரு கைப்பிடியில் பூண்டு பத்துப்பல், சீரகம் மூன்று சிட்டிகை சேர்த்தரைத்து இதை இரண்டு பகுதியாக்கி காலை, மாலை இம்மாதிரி 20 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப் பிரச்னை தீரும். பசியைத் தூண்டும்.
கட்டி, படை, புண்களுக்கு பற்றாகத் தடவலாம். தண்டு நுனியிலிருந்து வெளிவரும் சாறு வலுவின்மை, தோல் வியாதிகளைப் போக்கும். குளிர்ச்சி தரும். வலுவேற்றும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை. வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.
வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும்.
உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும். காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது.
வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும். விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காயங்களில் கிருமிகள் தோன்றாமல் தடுக்கும். முடக்குவாதம், தோல் வியாதிகளுக்கு உதவுகிறது. வேப்ப எண்ணெய் கருவுறுதலைக் தடுக்கிறது.
தொடர் தோல் வியாதிகளான தொழுநோய் மற்றும் ஆறாத புண்களைக் குணப்படுத்தும். சுளுக்கு மற்றும் முடக்குவாதத்திற்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது. கொட்டையிலிருந்து வேப்ப எண்ணெய் எடுப்பார்கள். இந்த எண்ணெயில் மார்கோசிக் அமிலம் உள்ளது. இந்த எண்ணெய் மஞ்சள் நிறத்துடன் கசப்பாக இருக்கும். அந்த எண்ணெய் விளக்கெரிக்கவும் பயன்படுகிறது. வேப்ப மரம் இவ்வாறு மக்களுக்கு நல்ல மருத்துவ பயன்களைத் தருகிறது. இத்தகைய மரத்தை வீட்டிற்கொன்று வளர்த்து நன்மை பல பெறுவோம்!
அழகுக்கூடும்…
அழகுக் குறிப்புகள்!!

Comments