குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
“நல்லாத்தனர் பேசினீங்க. ஆனால் இரண்டு இடத்தில் பேச்சுக் குறிப்பை விட்டுட்டு, தேடிக் கண்டுபிடிக்க அதிகநேரம் எடுத்துகிட்டீங்க. கூட்டம் அதுக்குள்ள சலசலத்துவிட்டது” என்றார். மேடையிலிருந்து பேசிவிட்டு இறங்கியவரிடம் அவரது நண்பர்.
பாராட்டத்தான் நெருங்கி வருகிறார் என எதிர்பார்த்த பேச்சாளருக்கு ஏமாற்றம். “மேடையில் ஏறி நின்னு பேசிப் பாரு. அதில் உள்ள கஷ்டம் புரியும்” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு வேகமாக ன நகர்ந்துவிட்டார் அந்தச் பேச்சாளர். விமரிசித்த நண்பருக்கு ஏமாற்றம். நல்லதுக்குத்தானே சொன்னோம். இப்படித் தப்பா புரிஞ்சுக்கிட்டுப் பேசுறாரே! என்று ஒரு வழி ஆகிவிட்டார்.
‘நீங்க சொல்றது சரி, சரியாக் கண்டுபிடிச்சீங்க இனித் தவிர்க்கிறேன்’ என்று பதில் சொல்லியிருந்தால், முதலிலே சொன்னாரே. நல்லாத்தான் பேசினீங்க என்கிற பாராட்டைத் தலைப்புச் செய்தியாக இவர் எடுத்துக் கொண்டு மகிழ்ந்திருக்கலாம்.
நம் செயல்களில் உள்ள தவறுகளை ஏற்றக்கொள்கிறபோது அத்தவறின் வீரியத்தை நாம் அழகுறக் குறைத்துவிடுகிறோம் என்பதை ஏனோ பலர் உணர மறுக்கிறோம்.
குறை சொல்லவும் ஒரு தகுதி வேண்டும் என்பதும் பலரிடம் இருக்கும் தவறான எதிர்பார்ப்பு. ‘இவனிடம் ஆயிரம் ஓட்டைகள். இவன் எப்படி என்னைச் சொல்லலாம்’ என்று கோபப்படுவது வாதத்தின் அடிப்படையில் சரிதான். ஆனால் பலனின் அடிப்படையில் தவறு.
தோட்டத்துக் கத்தரிக்காயை எவரும் விமரிசிக்கமாட்டார்கள். கடைக்கு, விற்பனைக்கு வந்துவிட்டால் சொத்தை, பூச்சி என்று சொல்லத்தான் செய்வார்கள்.
குறைகளை ஒப்புக்கொண்டால் உலகம் அதைப் பெரிதுபடுத்தாது. மறுத்தாலோ, சாக்குப்போக்குச் சொன்னாலோ அதைக் கெளரவப் பிரச்னையாக்கிவிடும்.
நம் முத்திரை கிழிக்கப்பட்டுவிட்டதே என்பதும் பலரது கோபத்திற்குக் காரணம், யானைக்கும் அடிசறுக்கும் என்கிற விதியை ஏற்கவேண்டியதுதான்.
பிறர் நகைக்க இடமாகிவிட்டதே என்பதும் சிலரது கோபம். திருஷ்டி கழியும் என்று நம்ப ஆரம்பித்து நல்ல ஆறுதல்.
100 சதவிகித முழுமையை இவ்வுலகம் எப்படி எதிர்பார்க்கலாம் என்பதும் சிலரது கோபம். அதில் நமக்கு நன்மை இருக்கிறதே!
குறை சொல்பவர்கள் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டுகிறார்கள். காட்டிவிட்டுப் போகட்டுமே! இதற்குச் சலுகை கொடுங்கள். கோபப்படாதீர்கள்.
Source : http://www.tamilvanan.com/content/2008/10/31/20081031-lena-katturai/
Comments
Post a Comment
கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!
use tamileditor.org for post you comments in TAMIL.