வன்முறையின் வித்துகளும் விழுதுகளும் :
சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்த வன்முறையும், அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்களையும் பார்த்து மிஸ்டர் மிடில் கிளாஸ் பொதுஜனம், ரொம்பவே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. காரணம், தமிழகத்தில் நடப்பது ஜனநாயகம் என்றும், எல்லாமே சரியாகத் தான் இருக்கிறது என்றும் நம்பிக் கொண்டிருப்பது தான். என்ன… இந்த மின்வெட்டால் தான் கொஞ்சம் பிரச்னை; மற்றபடி எல்லாமே இன்ப மயம்!
- இப்படி ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே சட்டக் கல்லூரி சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்க முடியும். ஆனால், நாட்டு நடப்பை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்திருக்காது. ஒரு உதாரணம்: திண்டிவனத்துக்கு அருகில் உள்ள ரெட்டணை என்ற கிராமத்தில் ஒரு போராட்டம் நடந்தது. என்ன போராட்டம் என்றால், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிகளுக்கு அரசாங்கம் ஒருநாள் கூலியாக 80 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளோ, ‘40 ரூபாய் தான் கொடுப்போம்’ என்று சொல்ல, தொழிலாளர்கள், ‘வேலை செய்ய மாட்டோம்’ என்று தர்ணா செய்தனர். உடனே போலீஸ் வந்தது. தர்ணா செய்த தொழிலாளிகளைக் கண்மண் தெரியாமல் தடியால் அடித்து நொறுக்கியது. பல தொழிலாளர்களின் மண்டை உடைந்தது.
ஒரு நாள் பூராவும் உடல் உழைப்பில் ஈடுபட்டால் அதற்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கூலி 80 ரூபாய். அதிலும், அதிகாரிகள் தருவது 40 ரூபாய்; எதிர்த்துக் கேட்டால் போலீசை விட்டு அடிப்பர். இந்தச் செய்தியும் தினசரிகளில் புகைப்படத்துடன் தான் வந்திருந்தது. ஆனால், இது நம்மில் யாரிடமும் ஒருவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. கிராமத்துக்கும், நகரத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தீர்களா? அங்கே 40 ரூபாய் ஒருநாள் கூலி; இங்கே காபி ஷாப்பில், ஒரு காபி விலை 40 ரூபாய். இப்படிப்பட்ட அதல பாதாள வித்தியாசம், இந்த உலகில் எந்த நாட்டிலுமே இல்லை என்று சொல்வேன். மீண்டும் சட்டக் கல்லூரி சம்பவத்துக்கு வருவோம்… அங்கே நடந்தது, நம் சமூகத்தில் நிலவும் ஜாதிக் கொடுமையின், ஜாதி ஒடுக்குமுறையின் ஒரு விபரீத விளைவு தான். இன்றும் சில கிராமங்களில் தலித்துகள் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.
அப்படி நுழைந்தால் கலெக்டர் முன்னிலையில் தான் நுழைய வேண்டியிருக்கிறது. அதுவும் 100 பேர் நுழைவதாக இருந்தால், 500 பேர் கொண்ட போலீஸ் படை பாதுகாப்பு. ஒரு தலித், கோவிலுக்குள் நுழைந்தால், அது ஒரு பெரிய அதிசய செய்தி என்ற அளவில் இருக்கிறது நம் நாடு. மேல வளவுவில் நடந்த கதையும் நமக்குத் தெரியும். ஒரு தலித் ஊராட்சித் தலைவராகி விட்டார் என்பதற்காக, அவரது தலையை வெட்டி உருட்டி விட்டனர். இத்தகைய வன்முறையின் ஒரு வெளிப்பாடு தான் சட்டக் கல்லூரி சம்பவம். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, கிராமங்களில் ஜாதிரீதியான ஒடுக்குமுறை நிலவுவதைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் முதலில் நிறுத்த வேண்டும். கல்லூரிகளிலும் ஜாதி ரீதியான விடுதிகள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் குறுக்கீடு இருக்கக் கூடாது. இப்படிப் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் ஏன் இது போன்ற ஜாதிக் கலவரங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடப்பதில்லை? இதே போன்ற நிர்வாக முறையை சட்டக் கல்லூரிகளிலும் கொண்டு வர வேண்டும். இதேபோல், சென்னையில் மற்றொரு தனியார் கல்லூரியில் ஒரு வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. இரவு உணவில் மாட்டுக் கறியைச் சேர்த்து விட்டனர் என்பதைக் காரண மாக வைத்து, பெரும் கலவரம் நடந்துள்ளது. தமிழக மாணவர்கள் மாட்டுக் கறிக்கு ஆதரவு; வட மாநில மாணவர்கள் எதிர்ப்பு. தமிழக மாணவர்களை வட மாநில மாணவர்கள் ஆயுதங்களால் தாக்கி விட்டனர்; இதுவும் கிட்டத்தட்ட ஜாதிக் கலவரத்தை ஒத்தது தான். மாட்டுக் கறி உண்பவர்கள் சமூகத்தின் கீழ்த்தட்டில் இருப்பவர்; அதை எதிர்க்கும் வட மாநிலத்தவர் மேல் தட்டு. எந்தத் துறையையும் தனியார் வசம் விட்டால் அது அரசுத் துறையை விட மேம்பட்டதாக இருக்கும் என்று ஒரு கட்டுக் கதை நிலவுகிறது. கலவரம் நடந்த அந்தக் கல்லூரி தனியார் கல்லூரி தான். மேலும், பல கல்லூரி நிர்வாகங்கள் வட மாநில மாணவர்களை ஒரு விதமாகவும், தமிழக மாணவர்களை அவர்களைவிடத் தாழ்வாகவும் நடத்துகின்றனர் என்பது மாணவர்களிடையே நிலவும் குற்றச்சாட்டு.
சட்டக் கல்லூரி சம்பவத்தில் திருவாளர் பொதுஜனம் அதிர்ச்சி அடைந்த மற்றொரு விஷயம், அந்தக் கொலைபாதகச் செயலை போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தான். இதற்கு நாம் குற்றம் சொல்ல வேண்டியது போலீஸ்காரர்களை அல்ல; அரசியல்வாதிகளைத் தான். காவல் துறை என்பது தமிழக ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் ஏவல் துறையாக மாறி, வெகுகாலம் ஆகிவிட்டது. காரணம், ஆளுகிற அரசியல்வாதி நினைத்தால் போலீசை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்தத் தண்ணியில்லாக் காட்டுக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். போஸ்டிங்கே போடாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கலாம். கிட்டத்தட்ட போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் எடுபிடிகளைப் போல் தான் ஆக்கப்பட்டு விட்டனர். உதாரணமாக, ஒரு அரசியல்வாதி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், அவருக்கு மலர்மாலை போட எத்தனை போலீஸ் அதிகாரிகள் யூனிபார்முடன் கியூவில் நிற்கின்றனர் என்று நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். ஏன் இப்படி… எந்த அதிகாரி அதிகமாக காக்கா பிடிக்கிறாரோ, அந்த அதிகாரிக்கே, ‘நல்ல’ துறை கிடைக்கும். இந்த, ‘நல்ல’ என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. சில போலீஸ் அதிகாரிகள் முதல்வரின் காலில் விழுவதைக் கூட பார்க்கிறோம்.
வேறொரு கால கட்டத்துக்குச் செல்வோம்… காமராஜர் முதல்வராக இருந்த நேரம். கக்கன் போலீஸ் அமைச்சர். அப்போது நேரு தமிழகத்திற்கு வருகிறார். அந்த விழாவில் கலந்துகொள்ள அந்த ஊருக்கு கக்கனும் செல்கிறார். ரயில் நிலையத்தில் நேருவை வரவேற்க வேண்டும். கக்கனின் காரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விடுகிறார். ஏனென்றால் அந்தக் காரில் வழக்கமான சிவப்பு விளக்கு இல்லை. வருபவர் அமைச்சர், அதுவும் போலீஸ் அமைச்சர் என்பது போலீஸ்காரருக்குத் தெரியாது. ”பிரதமர் வருகிறார், அதனால் காரை இதற்கு மேல் உள்ளே விட முடியாது” என்கிறார் போலீஸ்காரர். உடனே, காரிலிருந்து கக்கன் இறங்கி, விடுவிடு என்று ரயில் நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றிருக்கிறார். அந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் இரண்டு பர்லாங் தூரம். அப்போது கக்கன் சொன்னார், ”அந்தப் போலீஸ்காரர் அவருடைய கடமையைத் தானே செய்கிறார்? சிவப்புச் சுழல் விளக்கு இல்லாமல் வந்தது நம்முடைய தவறு தானே?”
இப்போது இப்படி நடக்குமா… நடந்திருந்தால் அந்தப் போலீஸ்காரரின் நிலைமை என்ன ஆகும்? எப்போதோ, ஒருநாள் மயிலாப்பூரில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அந்த இடமே ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி இருந்தது… ஒரே போலீஸ் மயம். பார்த்தால், பாரதிய வித்யா பவனுக்கு முதல்வர் வருகிறாராம். அதனால் தான் ஆரம்பத்தில் சொன்னேன்… இங்கே நடப்பது ஜனநாயகம் அல்ல என்று. அமெரிக்காவில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது, அவரது மகள் சாலை விதிகளை மீறி விட்டார் என்று அவரது டிரைவிங் லைசென்ஸ் பறிக்கப்பட்டது. இதுபோல், தமிழகத்தில் நடக்க முடியுமானால், அப்போது தான் இதை ஜனநாயக நாடு என்று சொல்ல முடியும். அதுவரைப் போலீஸ்காரர்கள், மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறதா என்று கைப்பேசி அழைப்புக்காக காத்துகொண்டு தான் இருப்பர்; கண் முன்னே ஒரு படுகொலைச் சம்பவம் நடந்து கொண்டிருந்தாலும்… மொத்தத்தில் சொல்லப் போனால், சமூக அளவில் - இப்போதைக்கு ஜாதியை ஒழிக்க முடியாது என்று தோன்றுகிறது; அதுவரை ஒவ்வொரு ஜாதியையும் மற்றொரு ஜாதி சகித்துக் கொள்ளப் பழக வேண்டும். அரசியலைப் பொறுத்தமட்டில், போலீஸ், கல்வி, நீதிமன்றம் போன்ற மிக அடிப்படையான துறைகள், அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டதாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும். அப்போது தான் நம்மால் நல்லதொரு சமூகச் சூழ்நிலையை உருவாக்க முடியும்.
-சாரு நிவேதிதா
எழுத்தாளர், விமர்சகர்
எழுத்தாளர், விமர்சகர்
நன்றி: தினமலர்
Comments
Post a Comment
கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!
use tamileditor.org for post you comments in TAMIL.