சமீபத்தில் ஒரு சிறு கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, ஒரு ஏழைச் சிறுவன் ஒரு பெரிய ஐஸ்க்ரீம் பார்லருக்கு செல்கிறான். அங்கு இருக்கும் ஒரு வெய்ட்டரிடம் ஒரு பிஸ்தா ஐஸ்க்ரீம் விலை கேட்கிறான். ஒரு குறிப்பிட்ட விலையை வெய்ட்டர் சொன்னதும் தன்னிடமுள்ள சிறு பையில் உள்ள காசுகளை எண்ணி பார்க்கிறான். பின்னர், இதை விட குறைவாக விலை உள்ள ஐஸ்க்ரீம் வேண்டும் எனவும் அதன் விலை என்ன என்றும் கேட்கிறான். வெய்ட்டருக்கு மிக எரிச்சல். மிகப் பெரிய கஸ்டமர்கள் காத்து கொண்டிருகிறார்கள். இந்த சிறு பையன் தனது நேரத்தை வீணடிக்கிறானே என்று.
ஒரு வழியாக , அந்த பையனின் அடக்க விலையில் ஒரு ஐஸ்க்ரீம் கிடைக்கிறது. விட்டது தொல்லை என்று எண்ணும் வெய்ட்ட்ர் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு அந்த பையன் சென்ற பிறகு அவனுடைய தட்டைப் பார்க்கிறார். அதில் ஐஸ்க்ரீம் விலையோடு அவருக்கான டிப்சும் இருக்கிறது. அந்த பையனிடம் இருந்த தொகையை கொண்டு அவனால் பிஸ்தா ஐஸ்கரிமே வாங்கி இருக்க முடியும் என்றாலும் கூட, வேயட்டருக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கதினாலேயே அந்த பையன் குறைந்த விலையில் உள்ள ஐஸ்க்ரீம் வாங்கி இருக்கிறான் என்று அவர் புரிந்து கொள்கிறார்.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் எனும் கருத்தினை கொண்ட இந்த கதை எனக்கும் கூட சில உண்மைகளை புரிய வைத்தது.
கொஞ்சம் யோசித்து பாருங்கள். பளபளக்கும் சூப்பர்/ஹைபெர் மார்கெட்டுகளில் மில்லி கிராம் தப்பாமல் எவ்வளவு பில் போட்டாலும் ஒன்றும் பேசாமல் பணம் நீட்டும் நாம் சந்தையில் இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசினாலும் கூட, நம்முடன் வந்திருக்கும் குழந்தையிடம் ஐந்து ரூபாய் மதிப்புள்ள பழத்தை அன்பாக (இலவசமாக) திணிக்கும் சிறு வியாபாரிகள்.
காரில் ஏற்படும் சிறு தொந்தரவுக்காக விசிடிங் சார்ஜ், இன்ஸ்பெக்சன் சார்ஜ், செக்கிங் சார்ஜ் (மனிதர் செய்யும் செக்கிங் இல்லாமல் கம்ப்யூட்டர் செக்கிங் வேறு) என்று கத்தியினை நமது பாக்கெட்டுக்கும் கழுத்துக்கும் வைக்கும் சர்விஸ் சென்டர்களுக்கு நடுவே வியர்க்க விறுவிறுக்க காரினை செக் செய்து, அதில் ஒரு பிரச்சினையும் இல்லை என்றால் பணம் வாங்க தயங்கும் (சில சமயங்களில் மறுக்கும்) கார் மெக்கானிக்குகள்.
இது மட்டுமல்ல, உறவினருக்காக மருத்துவமனையில் கவலையுடன் காத்திருக்கும் போது, கவலைபடாதீங்க, ஒண்ணும் ஆகாது என்று அன்பாக ஆறுதல் கூறும் (சிறு) மருத்துவமனை ஊழியர்கள்.
சிலரின் அகராதியில் பிழைக்க தெரியாதவர்கள் என்று பெயர் பெற்ற இவர்களுக்கு எத்தனை முறை நாம் ஒரு சக மனிதருக்கான மரியாதை கொடுத்திருக்கிறோம்? எத்தனை முறை அவர்களை நேருக்கு நேராக பார்த்து பேசி அவர்களின் அன்புக்கும் பெருந்தன்மைக்கும் மதிப்பு கொடுத்திருக்கிறோம்?
பணமும் பகட்டும் முக்கியம் அல்ல. மனமும் அதில் உள்ள நல்ல குணங்களுமே முக்கியம் என்றும் கதைகளின் உதவி இல்லாமலேயே நமக்கு உணர வைக்கும் இத்தகைய எளியோர் மன்னிக்கவும் இத்தகைய பெரியோரையும் மதிப்போமே.
Source : http://sandhainilavaram.blogspot.com/2008/11/blog-post_05.html
Comments
Post a Comment
கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!
use tamileditor.org for post you comments in TAMIL.