மக்களின் மீது மறைமுக வரி விதிப்பு ?



பொருளாதார தேக்கத்திலிருந்து இந்தியா மீள்வதற்காக வரிச் சலுகைகள், வரி விலக்குகள், வரி குறைப்புகள், வரி தள்ளுபடிகள், வரி விடுமுறைகள் என்றெல்லாம் வாரி வழங்கப் படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த பொது மக்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிற் துறையினர் ஆகியோருக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி வைத்தியம் இந்த "மறைமுக வரி விதிப்பு". இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.


(Courtesy:econjournal.com)

ஒரு நாட்டின் அரசின் வரவு செலவில் ஏற்படும் "துண்டு" இறுதியாக அந்த நாட்டின் மக்களின் மீதுதான் மறைமுகமாக சாத்தப் படுகிறது. இந்த "துண்டிற்கு" வெவ்வேறு வடிவங்கள் உண்டு.

ஒரு அரசு தனது செலவிற்கு போதிய பணம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் கடைசியாக கை வைக்கும் இடம் மக்களின் (முக்கியமாக நடுத் தர, எளிய மக்களின்) "பாக்கெட்". காலபோக்கில் மக்களின் உபயோகப் பொருட்களின் மீது அதிகரிக்கப் படும் நேரடி மற்றும் மறைமுக வரிகள், போக்குவரத்து, குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு என்று அரசு தனது நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க மக்களிடமிருந்தே பணம் "வசூல்" செய்ய வேண்டியிருக்கிறது.

இதற்கு மாற்று வழியாக, தலைமை வங்கியிடமிருந்து அரசு அதிக கடன் பெற முயற்சி செய்யும் பட்சத்தில் புதிய "கரன்சி" நோட்டுகள் அடிக்க வேண்டியதாகிறது. இதனால், நாட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு மீண்டும் அப்பாவி மக்களே பாதிக்கப் படுகின்றனர். ஒருவேளை நோட்டு அச்சடிக்கப் படா விட்டால், அரசு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அதிக கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்போதோ, நாட்டில் கடும் நிதி நெருக்கடி மற்றும் தட்டுப் பாடு நேரிடும்.

ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் போது, அந்நாடு சர்வதேச தரவரிசையில் கீழே இறங்குகிறது. ஏற்கனவே நம் நாட்டின் தரவரிசை மிகவும் கீழே. அதாவது BBB-. இது இடைகால பட்ஜெட்டிற்கு பின்னர் இன்னும் குறைக்கப் படலாம் என்று தெரிகிறது. இதனால் உலக சந்தையில் நம்நாட்டின் கரன்சியின் மதிப்பு மேலும் குறைந்து இறக்குமதி செலவுகள் அதிகமாகும். இதனால், உள்நாட்டில் விலைவாசி விரைவாக ஏறும் வாய்ப்பு உள்ளது.

மேலும், ஒரு அரசின் நிதிப் பற்றாக்குறையானது, அந்நாட்டில் புதிய மக்கள் நல திட்டங்கள், அடிப்படை கட்டுமான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை ஆரம்பிக்க பெரும் தடையாக இருக்கும். இதனால், மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கும்.

எப்படிப் பார்த்தாலும், ஒரு நாட்டின் அரசிற்கு பட்ஜெட்டில் விழும் துண்டானது நாட்டின் மக்களையே அதிகம் பாதிப்பதனால்தான், பட்ஜெட் பற்றாக்குறையை "மறைமுக வரி விதிப்பு" என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இப்போது இந்தியாவின் கதைக்கு வருவோம்.

மத்திய அரசின் நடப்பு நிதியாண்டின் (2008-09) நிதித் தட்டுப்பாடு (Fiscal Deficit) எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்! சுமார் மூன்று லட்சத்து இருபதினாயிரம் கோடி ரூபாய். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஆறு சதவீதம். கடந்த நிதியாண்டில் இது வெறும் 2.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. மேலே சொன்ன தொகையோடு, பெட்ரோல் மானியம் மற்றும் உர மானியத்திற்கான (சுமார்) 95,000 கோடி ரூபாயையும் கூட்டி கொண்டால் வரும் நிதிப் பற்றாக்குறை அளவு கிட்டத்தட்ட 4,15,000 கோடி ரூபாய். (குழந்தைகள் முதல் மரணப் படுக்கையில் இருப்பவர் வரை ஒவ்வொரு இந்தியனுக்கு சராசரியாக விழப் போகிற "துண்டு" சுமார் 4,100 ரூபாய். இது மத்திய அரசு வகையில் மட்டும்தான். இன்னும் மாநில அரசுகள், மாநகராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள் என பல அரசு அமைப்புகளாலும் மக்களுக்கு போடப் படும் "துண்டுகளின்" பாரம் தாங்காமல் மக்கள் மயங்கி விழ வேண்டியிருக்கும்.)

நாட்டினை பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு அரசு செலவினங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன என்று சிலர் கூறிக் கொள்வது எந்த அளவிற்கு உண்மை என்று அரசின் நிதி நிலை அறிக்கையை சற்று கூர்ந்து படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.

ஒரு அரசின் செலவினங்களில் இரு வகை உண்டு. அதாவது, அரசின் நிர்வாக செலவுகள் (Non Plan Expenditure) மற்றும் மக்கள் நல மற்றும் இதர அடிப்படை கட்டுமானத்திற்கான திட்ட செலவினங்கள் (Plan Expenditure). நடப்பு நிதியாண்டிற்கான மதிப்பீட்டிலிருந்து அரசின் நிர்வாக செலவுகள் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. திட்ட செலவுகள் சுமார் நாற்பதினாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. எனவே அரசின் அதிகப் படியான நிர்வாக செலவே இந்த நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு நாடிருக்கும் பொருளாதார நிலையில், பொது மக்களை விட அரசுக்கு அதிக பொறுப்புகள் உண்டு. மேலும், குறைந்த அளவிலேயே கைவசம் உள்ள பணத்தை மிச்சப் படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதைக்கு திருப்பி விடுவதில் மத்திய அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இதில் இந்த அரசுக்கு மட்டுமல்ல அடுத்து அமையப் போகும் அரசுக்கும் நிறைய கடமைகள் இருக்கின்றன.

Comments