ஒரு சென்ட் பாட்டில் திருட்டு.. குடும்பத்துடன் சிறை..!!

சென்னையைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் ஒருவரின் மனைவி, ஒரு செண்ட் பாட்டிலைத் திருடிய குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக, அடுத்தடுத்துத் தொடந்து செய்த பல தவறுகளால், இப்போது அவரது மொத்தக் குடும்பத்திற்கும், பத்தாண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் யூசுஃப் சயிது. இவர் தனது மனைவியான மும்தாஜ் மற்றும் 16 வயது மகள் மெஹ்னாஸ் ஆகியோருடன் விடுமுறையைக் கழிப்பதற்காக அயல்நாடுகளுக்கு உல்லாசச் சுற்றுலா சென்றுள்ளார். பல நாடுகளிலும் உல்லாசமாகப் பொழுதைக் கழித்த இந்தக் குடும்பத்தினர், இறுதியாக இந்தியா திரும்பும் முன்னர் பாங்காங் சென்றுள்ளனர்.

பாங்காங்கையும் சுற்றிப் பார்த்து விட்டு, சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர் அந்தக் குடும்பத்தினர். விமானத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தில் விமான நிலையத்தில் உள்ள கடைகளில் சென்று பொருட்கள் வாங்க விரும்பியுள்ளார் மும்தாஜ்.

விமான நிலையத்தில் இருந்த ஒரு கடையில் பொருட்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த மும்தாஜின் மனதைக் கொள்ளை கொண்டது ஒரு அழகிய செண்ட் பாட்டில். ஆனால் அதைப் பணம் கொடுத்து வாங்க விரும்பாத மும்தாஜ், கடைக்காரர் அசந்த நேரம் பார்த்து அந்த செண்ட் பாட்டிலைத் திருடித் தனது கைப்பைக்குள் போட்டுக் கொண்டார்.

பின்னர் எதுவும் நடக்காதது போல அங்கிருந்து நகர்ந்து விட்டார். தான் செண்ட் பட்டிலைத் திருடியதை யாரும் பார்க்கவில்லை என்றும், அதனால் தான் செய்த இந்தத் திருட்டு யாருக்கும் தெரியப் போவதில்லை என்ற உறுதியான நம்பிக்கையில் சென்னை செல்லும் விமானத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கியுள்ளார் மும்தாஜ்.

ஆனால் அந்தப் பெண்ணை விதி, கேமரா வடிவில் பழி வாங்கி விட்டது. கடைக்காரரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அந்தப்பெண் செண்ட் பாட்டிலைத் திருடிய காட்சி, அச்சுப் பிசகாமல் தத்ரூபமாக அந்தக் கடையில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொருத்தப்பட்டிருந்த வீடியோக் கேமராவில் தெளிவாகப் பதிவாகி விட்டது.

விமானநிலையக் காவலர்களால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் அந்த வழக்கு முடியும்வரை பாங்காங்கை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அனதபெண்ணின் கடவுச்சீட்டும் (PASS PORT ) விமானநிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறு திருட்டு வழக்கான இதை முறைப்படி எதிர்கொண்டு, அந்தக் குற்றத்திற்கான தண்டனையாக விதிக்கப்படும் அபராதத் தொகையைக் கட்டி விட்டு அதன் பின்னர் சொந்த நாடு திரும்பியிருந்தால் பிரச்சினை அத்தோடு முடிந்திருக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு.

ஆனால் எப்படியாவது சட்டத்தை ஏமாற்றி அந்த நாட்டிலிருந்து விரைவாக வெளியேற வேண்டும் என்று குறுக்கு வழியில் யோசித்த அந்தப் பெண்ணின் கணவர், தனது மனைவியின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டது என இந்தியத் தூதரகத்தில் ஒரு பொய்யான புகாரைக் கொடுத்து, தற்காலிகச் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக் கொண்டு அதைப் பயன்படுத்தித் தப்பிச் செல்லத் திட்டம் தீட்டி உள்ளார்.

திட்டப்படி எல்லாம் சரியாக நடந்து, தனது குடும்பத்துடன் அந்தப் பெண்ணும் விமானத்தின் உள்ளே சென்று அமர்ந்து விட்ட நிலையில், க்டைசி நேரத்தில் மீண்டும் விதி துரத்த அந்தப் பெண்ணின் தற்காலிகச் சான்றிதழ் பற்றி விமான நிலையக் குடியேற்ற அதிகாரிகளுக்கு சந்தேகம் வரவே மீண்டும் மாட்டிக் கொண்டார் அந்தப் பெண்.

ஏற்கனவெ செண்ட் பாட்டில் திருடிய சாதாரண வழக்கு, இப்பொழுது இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் பொய்யான புகாரைக் கொடுத்து மோசடி செய்தது, திருட்டு வழக்கிலிருந்து தப்பியோட முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளுடன் சேர்த்து கடும் தண்டனைக்குறிய கிரிமினல் குற்ற வழக்காக மாற்றப்பட்டு விட்டது.

நிலைமை இவ்வளவு தூரம் மோசமடைந்து விட்ட பின்னரும் நேர்வழியில் சிந்திக்காமல், மீண்டும் வழக்கை முடிக்காமல் அந்த நாட்டிலிருந்து தப்பிச் செல்ல ஏதாவது குறுக்கு வழிகள் உள்ளதா? என்றே ஆராய்ந்துள்ளார் அந்தப் பெண்ணின் கணவர்.

ஒரு போலி பாஸ்போர்ட் முகவர் ஒருவரின் மூலமாக வேறொரு பெண்ணின் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை எடுத்து விட்டு அதில், தனது மனைவியின் புகைப்படத்தை ஒட்டி, தனது மனைவிக்குப் போலியாக ஒரு பாஸ்போர்ட்டைத் தயாரித்து உள்ளார்.

போலி பாஸ்போர்ட் மூலமாகச் செல்வதால், நேரடியாகச் சென்னை செல்வதைத் தவிர்த்து விட்டு, முதலில் கொல்கட்டா சென்று, பின்னர் அங்கிருந்து சென்னை சென்றால் பிரச்சினை இருக்காது என்று எண்ணி, கணகச்சிதமாகத் திட்டங்களைத் தீட்டியுள்ளார் அந்தப் பெண்ணின் கணவர்.

பின்னர் தன்னுடன் தனது மகளையும், போலி பாஸ்போர்ட்டின் மூலமாகத் தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு பாங்காங் குடியேற்ர அதிகாரிகளை ஏமாற்றி விட்டு விமானத்தில் ஏறி பத்திரமாகக் கொல்கட்டா வந்து சேர்ந்து விட்டார்.

கொல்கட்டா விமானத்தில் இருந்து இறங்கி வெளியேறும் போது விமான நிலைய முடியேற்ற அதிகாரிகள் மேற்கொண்ட சோதணைகளில், அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட் போலியானது என்று கண்டுபிடிக்கப்படவே, மீண்டும் கைது செய்யப் பட்டார் அந்தப்பெண்.

ஆனால் இந்த முறை இவர் கைது செய்யப்பட்டது தனது சொந்த நாடான இந்தியாவில், இந்திய அதிகாரிகளால். அது மட்டுமல்ல இந்த முறை அந்தப்பெண்ணுடன் சேர்த்து, அவர் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக அவரது கணவனும், அவரது மகளும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

மிகச் சொற்ப விலையுள்ள ஒரு செண்ட் பாட்டிலை விலை கொடுத்து வாங்க மனமில்லாது, அதைத் திருட முயன்று அகப்பட்டுக் கொண்டது, இந்தியத் தூதரக அதிகார்களை ஏமாற்றியது, போலி பாஸ்போர்ட் மூலமாகத் தப்பிக்க முயன்றது, என ஆரம்பம் முதல் இறுதிவரை எந்தப் பிரச்சினைக்கும் நேர் வழியிலான தீர்வைத் தேடாமல் குறுக்கு வழிகளில் தப்பிக்க முயன்ற அந்தக் குடும்பம் மொத்தமும் இப்பொழுது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கின்றது.

அந்தப் பெண் செய்த ஒரு சிறு தவறுக்கான தண்டனையை நேர்மையாக ஏற்றுக் கொள்ளாமல் அதிலிருந்து தப்பிப்பதற்காக மேலும் மேலும் அடுக்கடுக்கான பல தவறுகளைத் தொடர்ந்து செய்ததாலேயே இப்போழுது ஒட்டுமொத்தக் குடும்பமும் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது

சாதாரண செண்ட் பாட்டில் திருட்டில் தொடங்கிய சிறு தவறானது, சிறிது சிறிதாக வளர்ந்து இன்று ஒரு குடும்பத்தில் உள்ள அணைவருக்கும் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத் தரும் அளவுக்குப் பெரிய குற்றமான போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்க வைத்துள்ளது.

ஒரு தவறை மூடி மறைத்து அதில் இருந்து தப்பிக்க இன்னொரு தவறு என்று செய்யத் தொடங்க, தவறுகள் வளர்ந்து பெரிதாகி இறுதியில் அது இந்தக் குடும்பத்தையே மிகப்பெரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகளாக மாற்றி விட்ட இந்த சம்பவத்தை எல்லோருமே ஒரு படிப்பினையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் எப்பொழுதுமே ஒரு தவறுக்கு இன்னொறு தவறு பிரயச்சித்தம் ஆகாது இல்லையா?, அவை பழி வாங்கும் நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, அல்லது தவறுகளை மூடி மறைத்து அதில் இருந்து தப்பிக்கும் ந்டவடிக்கைகளாக இருந்தாலும் சரி. ஏனென்றால் உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்! தப்பைச் செய்தவன் தண்டனை அடைவான்! என்பது உண்மைதான்.

Comments

Popular posts from this blog

கலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

MLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...!!!???