MLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...!!!???

அலுவலகத்தில் வேலை செய்யும் அல்லது தனிப்பட்ட முறையில் தெரிந்த நண்பர், ஒரு நாள் திடீரென்று போன் செய்து, "என்ன நீங்க நம்ம வீட்டுப் பக்கமே வர மாட்டீங்கறீங்க என்று விசாரித்துவிட்டு, நம்ம வீட்ல ஒரு கெட் டு கெதர் வெச்சிருக்கேன். ஞாயித்துக்கெழம காத்தால ஒரு பத்து மணிக்கா வாங்களேன் நெறய இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் இருக்கு" என்று சொன்னாலோ...

அல்லது...

அதே போன்ற ஒரு நண்பர், அதே ஃபோன்.. "ஒரு எக்ஸெலென்ட் பிசினெஸ் ஆப்பர்ச்சூனிட்டி. இந்த பிஸினெஸ்ல ஜெயிச்சவர் ஒர்த்தரு நமக்காக ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காரு கூட்டிட்டு வரட்டுமா" என்று சொன்னாலோ...

அந்த நண்பர் 99 சதவிகிதம் பல்லடுக்கு வியாபாரத்திற்குள் (Multi level marketing) இருக்கிறார். உங்களையும் உள்ளே கொண்டு போக விழைகிறார் என்று அர்த்தம்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக இதில் ஈடுபட்ட பலரையும் பார்த்த அனுபவங்களை சொல்லவே இந்த இடுகை.

எல்லா மல்டி லெவெல் மார்கெட்டிங் கம்பெனிகளும் ஃப்ராட் என்பதோ, அதை செய்யும் நபர்கள் எல்லாம் ஏமாற்று பேர்வழிகள் என்பதோ நிச்சயமாக என் கருத்து அல்ல.

பெரும்பாலானோருக்குள் இருக்கும் எளிதாக காசு பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டு மூளை சலவை செய்து உங்களை சங்கிலித்தொடருக்குள் வரவைக்க முயற்சிப்பார்கள்.

இந்த வியாபாரத்தில் லாபம் அடைய வழி, மேன் மேலும் ஆட்களை சேர்ப்பதன் மூலம்தான். பொருள்களை விற்று வரும் கமிஷன் தொகை மிக சொற்பமே.இதற்கு முக்கிய காரணம் இந்த பொருள்கள் எல்லாம் வெளி சந்தையில் கிடைக்க கூடியவற்றை விட பல மடங்கு அதிகம்.ஒரு நல்ல ப்ராண்ட் பற்பசையை 40 ரூபாய்க்கு கடையில் வாங்க முடிந்தால் அதை போன்ற ஒரு பற்பசை இங்கே 100 ரூபாயாக இருக்கும்.இதற்கு அவர்கள் கூறும் காரணம் "தரம்".

இந்த 100 ரூபாய் பற்பசையை ஒர் பட்டாணி அளவே உபயோகித்தால் போதும் என்பார்கள். (ஆனால் உண்மையில் கடையில் வாங்கும் 40 ரூபாய் பற்பசையும் பட்டாணி அளவே போதும்.)

அப்படியே தரம் அதிகம் என்று வைத்து கொண்டாலும், 40-50 வருடங்களாக சந்தையில் இருக்கக்கூடிய (எ.கா.-கோல்கேட்)பொருளை விட சிறந்தது என்று பலரையும் கன்வின்ஸ் செய்து வாங்க வைப்பது மிக கடினம்.இது போலவே சோப்பு, ஷாம்பூ என்று பலவும் உண்டு.

நீங்கள் உறுப்பினராகிவிட்டால் வீட்டுக்காக வாங்கும் பொருள்கள் மாதம் 500 ரூபாய் என்றால் 75 ரூபாய் திரும்ப கிடைத்துவிடும் என்பது இன்னொரு துருப்பு சீட்டு. ஆனால் வெளி சந்தையில் வாங்கினால் இந்த செலவு ரூபாய் 300 மட்டுமே ஆகும்.

ஒரு விஷயம் நிச்சயம் உறுதி. கடினமாக உழைத்து உங்களுக்கு கீழே பலரும் சங்கிலியில் இணைந்து விட்டால் லாபம் கிடைக்க வழி உண்டு. ஆனால் இத்தகைய கடின உழைப்பும், வியாபார திறமையும் இருப்பவர்கள் மற்ற துறைகளிலும்(விற்பனை பிரதிநிதி,ஆயுள் காப்பீட்டு முகவர் போன்ற) பிரகாசிக்க வாய்ப்பு மிக அதிகம்.

சில வருடங்களுக்கு முன் இத்தகைய பல்லடுக்கு வியாபாரங்கள் செய்யும் பல நிறுவனங்கள் இருந்தன. மேலே குறிப்பிட்ட மாதந்திர சாமான்கள் தவிர மலேஷியாவில் இருந்து மருந்து, தங்கம்,நிலம்,வீடு,காய்கறி,மளிகை என்று பல வகைகள் உண்டு.பொருள்களே இல்லாமல் ஆள் சேர.. சேர.. வெறும் காசு மட்டுமே திரும்ப கிடைக்கும் என்று கூறும் ஏமாற்றும் இருந்தது.

கொஞ்சம் கூட பேச்சு திறமையே இல்லாத பல நடுத்தர வர்க்க நண்பர்கள், நாலு பேர எப்படியாவது சேர்த்துவிட்டால் அவர்களில் ஒருவரோ அல்லது அவர்களுக்கு கீழே இருக்கும் ஒருவரோ தீவிரமாக உழைத்தால் காசு கிடைக்கும் என்று நம்பி சேர்ந்துவிடுகிறார்கள்.

இதற்காக இவர்கள் நம்புவது அவர்களுடைய மார்க்கெட்டிங் திறமையை அல்ல. நட்பு வட்டத்தை !!!

இதற்கு இரண்டு விதமான பின்விளைவுகள் உண்டு.

முதலாவது, நட்பு முறிவு.(டேய், சங்கிலி சாமினாதன் வர்ரான்... ஒட்றா..). பல வருடங்களுக்கு பிறகும் கூட, "நம்ம கேட்டு இவன் சேர மாட்டேன்னுட்டான் இல்ல"...என்று இவரும், "இவன் இன்னும் அந்த பிஸினஸ் செய்யறானோ" என்று அவர் நண்பரும் நினைத்துக்கொண்டு ஒன்று சேர்வதேயில்லை. சாதரணமாக இவர்கள் ஃபோன் செய்தால் கூட "வீட்ல அவர் இல்லீங்க" என்ற வசனம் அடிக்கடி பேசப்படும்.செல்லாக இருந்தால் சிக்னல் வீக்காகவோ, மீட்டிங்கிலோ இருப்பதாக சொல்லி கட் செய்து விடுவார்கள்.

இரண்டாவது, காசு போனால் போய் தொலையட்டும் "இவன் மூஞ்சிய தெனம் பாத்து தொலையணுமே" என்பதற்காக சேர்ந்துவிட்டு ஒன்றுமே செய்யாமல் கிடப்பில் போட்டு விடுவது.

உச்சகட்ட கொடுமையாக நீ என்னோட ஸ்கீம்ல சேரு... நான் ஒன்னோடதுல சேந்துக்கறேன் என்று இரண்டிலும் தொலைக்கும் அசம்பாவிதமும் நடந்ததுண்டு.

எனக்கு தெரிந்தவர்களில் சுமார் 50 பேர் இந்த மல்டி லெவல் வியாபாரத்தை முயற்சி செய்து பல வேறு லெவல்களில் நிறுத்தி விட்டார்கள். இதன் பலனாக இவர்கள் இழந்தது சிலரின் நட்பு, அடைந்தது பலரின் கிண்டலும் கேலியும்.

இந்த மல்டிலெவெல் மார்க்கெட்டிங் செய்யும் / செய்யப்போகும் அன்பர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கைதான்.

தயவு செய்து நண்பர்களையும், உறவினர்களையும் நம்பி இதில் இறங்கி.உறவுகளை முறித்து கொள்ளாதீர்கள்.

உழைப்பை நம்பினால் வெற்றி நிச்சயம், அதற்கு பல்லடுக்கை விட சிறந்த வழிகள் பல உண்டு. 



source: http://kirukkugiren.blogspot.com/2009/04/blog-post_07.html

Comments