வெயில் குளிர்வித்த மாலை!!



எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமை... இப்படித்தான் ஆஆரம்பிக்க என்ணினேன், ஆனால் அவரை சந்தித்த பின் அவரது எளிமை, நெருக்கம் இத்தேவையை குறைத்து விட்டது.

செப். 24,25 தேதிகளில், சேர்தள நண்பர்களின் அழைப்பின் பேரில் வந்திருந்த எஸ்.ரா ( எழுத்தாளர் என்கிற ஒரு கட்டத்துக்குள் அவரை நிறுத்த முடியவில்லை, அவர் ஆளுமை எல்லா தளத்திலும் விரவி உள்ளது ) சரி அவரை சந்திக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது. இங்கேதான், தகுதியை அதிர்ஷ்டம் வென்றது, அவரை சந்தித்தது நிச்சயமாக ஒரு அதிர்ஷ்டம்தான்.

முதல் நாள் (செப்.-24), அவரை சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் பார்த்த பொழுது எவ்விதமான பரபரப்பும் இன்றி காணப்பட்டார். அதுவே ஆச்சரியம். இங்கே திருப்பூரில் பதற்றம் மட்டுமே பார்த்துப் பழகிய கண்கள் விரிந்தன அவர் அமைதியால்.

பிறகு தொடங்கிய உரையாடலில், என்போன்ற கற்றுகுட்டிகளுக்கும், இலக்கிய பரிச்சயம் உள்ளவர்களுக்கும் ஒரே குரலில் பதிலளித்து சமநிலை பேணிய போது விழிகள் விரிந்தே இருந்தது ஆச்சரியத்தால். இரவு உணவுக்கு பிறகு பிரியும்போழுது கூட, ஏதோ நெடுநாளைய நண்பரை பிரிவது போல் இருந்த்து.

இரண்டாம் நாள் (செப்.-25) விடிந்ததும், என் அகமுடையாளுடன் புறப்பட்டேன். மாலை வரை காத்திருந்து, 5:30 மணிக்கு தொடங்கிய எஸ்.ரா என்னும் வெயில் எங்களை நனைக்கத் தொடங்கியது. 8:30 மணிக்கு இரவு உணவின் போதும், பிறகும் எங்களை குளிர்வித்தது. வெளிநாடு செல்லும் நண்பனிடம் பேசுவது போல இருந்தது. போன பிறகும் எதோ கேட்க வேண்டியதை மறந்தது போல். ஆனால் அருகில் இருக்கும் போது எல்லாமே கேட்டது போல.

எஸ்.ரா. விடம் எப்பொதுமே ஒரு தெளிவு, ஒரு அமைதி,  ஒரு ஆழம், ஒரு குளிர்மை.

அவரே சொல்கிறார், 2000 ம் ஆண்டுவரை அவர் தகிக்கும் வெயிலாகத்தான் இருந்திருக்கிறார், அதை இப்பொழுது கற்பனை கூட செய்யமுடியவில்லை. சு.ரா. வுடனான அவரது உறவு நமக்கும் கிடைக்குமா என்று ஏங்க வைத்தது.

என் அகமுடையாளுக்கு, இலக்கியபரிச்சயம் குறைவு, ஆனால் அவரே, என்ன மாயம் ஏன் தான் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் அவரை சந்தித்த பின் என்றார். எனக்கும்தான் என்றேன்.

இன்னும் எவ்வளவோ உண்டு, ஆனால் எழுதிப் பரிச்சயம் இல்லை. ஆனால் , வாழ்வில் எப்பொழுதும் நினவில் வைத்திருக்கும் படியான் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சேர்தள நண்பர்களுக்கு ... நன்றி.
 

Comments