ஒரு மணி நேரத்தின் விலை..

எங்கே இருந்து வந்தோம்னு தெரியாது எங்க போகப் போறோம்னும் தெரியாது. இந்த ரெண்டு கேள்விக்கும் நடுவுல ஒரு அழகான வாழ்க்கை நமக்குக் கிடைச்சிருக்கு. இந்த உலகத்துல எவ்வளவோ அழகான விசயங்கள் இருக்கத் தாங்க செய்யுது. என்னிக்காவது ஒரு நாள் ஏதாவது ஒன்ன ரசிச்சிருக்கோமா ? எத்தனையோ முறை பூக்களப் பார்க்குறோம் நிலாவப் பார்க்குறோம் மழை பெய்யும் போதோ இல்ல வெயிலுக்காகவோ மரநிழல்ல ஒதுங்குறோம் என்னிக்காவது அந்த பூக்களையோ நிலாவையோ மழையையோ இல்ல அந்த மரத்தையோ ரசிச்சிருகிறோமான்னா நம்ம நிறையப் பேரோட பதில் இல்லைன்னு தாங்க இருக்கும்.

அதுக்கெல்லாம் நேரமில்லைன்னு தான் சொல்லுவோம். ஏன்னா இந்த போட்டியான இயந்திர வாழ்க்கையின் அதிவேகப் பயணத்துல நாமெல்லாம் நம்மள அறியாமலேயே கட்டாயப் பயணிகளா ஆக்கப்பட்டு இருக்குறோம். இன்றைய உலகத்துல இது தவிர்க்க முடியாத பயணம்ங்க.

ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரங் கூட பத்தலைன்னு சொல்லுரவங்க கூட இருக்குறாங்க. நாம வாழ்நாள்ல மூனுல ஒரு பங்க தூக்கத்துக்குன்னு ஒதுக்குவோம். இந்த தூக்கத்தக் கூட குறைச்சுக்கிட்டு எப்பப் பார்த்தாலும் எதாவது ஒரு பிரச்சனைய தலையில தூக்கிக்கிட்டு அலையிரவங்க நம்மள்ல நிறைய பேரு இருக்கிறாங்க.

இந்த உலகத்தையே தன்னோட நடிப்பால சிரிக்க வச்ச சார்லி சாப்லின் சொல்லுவாராம் மழையில நனையிரதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் அப்பத் தான் நான் அழுவுரது யாருக்கும் தெரியாதுன்னு.

வாழ்க்கையில பிரச்சனை இல்லாதா மனிதனே இல்ல. பிரச்சனை இல்லாட்டி அவன் மனுசனே இல்லீங்க. ஒவொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கத் தாங்க செய்யுது. அத மட்டுமே நினைச்சுக்கிட்டு இருந்தா இந்த வாழ்க்கையே பெரிய பிரச்சனையாயிடுங்க.

மாற்றம்ங்கிற ஒன்னத்தவிர எல்லாமே மாறிக்கிட்டுத் தாங்க இருக்கு இந்த உலகத்துல. அதனால நம்ம வாழ்க்கையோட எல்லாக் காயங்களுக்கும் காலத்துக்கிட்ட மருந்து இருக்கு ஏன்னா காலந்தாங்க மதிப்பு இல்லாதது. ஒரு மணி நேரத்துக்கு பத்து டாலர் சம்பாதிக்கிற ஒரு தொழிலாளியும் சரி அதே ஒரு மணி நேரத்துக்கு பத்தாயிரம் டாலர் சம்பாதிக்கிற ஒரு தொழிலதிபரும் சரி, அவங்க அந்தத் தொகைய சம்பாதிக்க எடுத்துக்கிட்டது ஒரு மணி நேரந்தாங்க. அப்ப அந்த ஒரு மணி நேரத்தோட மதிப்பு பத்து டாலரா ? இல்லா பத்தாயிரம் டாலரா ? இதுக்கு விடை சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் காலத்தோட மதிப்பு மாறுபடும்ங்க.

ஒரு சின்னப் பையன் தன்னோட அம்மா கிட்ட போயி கேட்டானாம் அம்மா அம்மா... அப்பாவோட சம்பளம் எவ்வளவுமான்னு அதுக்கு அவங்க அம்மா சொன்னாங்களாம் ஒரு மணி நேரத்துக்கு இருபது டாலர்ன்னு. அந்நில இருந்து அந்தப் பையன் தனக்குக் கிடைகிற பாக்கெட் மணியெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு டாலர்ன்னு சேர்த்து இருபதாவது நாள் தன்னோட அப்பாக் கிட்ட போயி அவன் சேர்த்து வச்ச இருபது டாலரக் கொடுத்து அப்பா அப்பா இந்தாங்க இருபது டாலர் உங்களோட ஒரு மணி நேர சம்பளம். தயவு செஞ்சி இத வச்சுக்கிட்டு என் கூட ஒரு மணி நேரம் இருங்கப்பா. நீங்க இதுவரை பத்து நிமிசங்கோட என்னோட இருந்ததில்லை உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னானாம்.

இந்த இயந்திர உலகத்துல நாம இழந்தது என்னானு இப்பவாவது தெரியுதா ?
இப்படியே பணத்துக்காக பாசத்த இழந்துக்கிட்டே இருந்தோம்னா. வருங் காலத்துல சாதாரண இல்லங்கள விட முதியோர் இல்லங்கள் தாங்க அதிகமா இருக்கும்.

நாம பாசத்தக் காட்டாம அவங்க கிட்ட இருந்து மட்டும் எதிர் பார்க்கிறது எந்த விதத்துல நியாயம்னு தெரியலைங்க. இப்ப நாம பாச விதைய விதைச்சாத் தானங்க எதிர்காலத்துல அதனோட நிழல எதிர் பார்க்க முடியும்.

பாசமெல்லாம் இல்லாம இல்ல அவங்க சந்தோசமா இருக்கத்தான நாங்க நேரங்காலம் பார்க்காம உழைச்சிக்கிட்டு இருக்கிறோம் அப்படீன்னு சொல்றீங்களா. நீங்க நேரமில்லன்னு பாசத்த பூட்டி வச்சிருந்தா அவங்களுக்கு எப்படிங்க தெரியும் ? அவங்களுக்காகவும் உங்களுக்காகவும் எனக்குத் தெரிஞ்ச ஒரு சின்ன வழிய சொல்லுறேன் கேளுங்க.

ஒரு நாளைக்கு இருக்கிற இருபத்து நாலு மணி நேரத்துல மணிக்கு ஒரு நிமிசமா சேர்த்து இருபத்து நாலு நிமிசத்த ஒரு நாளைக்கு நாம நமக்கே நமக்குன்னு ஒதுக்கி அதுல இருபது நிமிசத்த நம்ம குடும்பத்தோட மகிழ்ச்சியா மனம் விட்டு பேசுனம்னாவே நாம அந்த நாள் முழுசும் மகிழ்ச்சியா இருந்த சந்தோசம் கிடைக்கும்ங்க. நீங்க வேண்ணா இன்னிக்கே இத முயற்சி செஞ்சி பாருங்க. உங்களுக்கே ஒரு மாற்றம் தெரியும் அது நிச்சயமா மகிழ்ச்சியான மாற்றமாத் தாங்க இருக்கும்.

தூங்குறதுக்கு மட்டுமே மூடுற நம்ம கண்களை முழிச்சுக்கிட்டு இருக்கும் போதே இமைய மட்டும் மூடியபடி மீதியிருக்கிற நாலு நிமிசமும் அமைதியா நம்மளோட சுவாசத்த மட்டும் கவனிச்சுப் பாருங்க. முதல்ல கொஞ்சம் கஷ்டமாத் தாங்க இருக்கும் போகப் போக உங்களுக்கு அந்த நாளோட டென்சனெல்லாம் குறைஞ்சு இந்த இயந்திர வாழ்க்கை இயற்கையாகவே உங்கள் வசப்படும்ங்க............................



நன்றி: http://puthiyavanonline.blogspot.com/2008/12/24.html

Comments

  1. அய்யா ராமரே....வில்லெடுத்துட்டு வருவீங்கனு பாத்தா ..சொல்லெடுத்துட்டு கவித எழுத போட்டிக்கு வர்ரீங்களே....

    ReplyDelete
  2. அருமையான பதிவு நண்பரே. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.