உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள் -


உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
நாள் முழுக்கக் கடுமையாக உழைத்து 100 முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்கிற பல்துறைத் தொழிலாளர்கள் உண்டு.
இவர்களது வாழ்க்கையில் என்ன பெரிய மாறுதல்கள் வந்துவிட்டன என்கிறீர்கள்?
இவர்களுள் சிலர் இருப்பதில் சிறிய அளவில் சேமித்து, கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகாமல் இதுவல்ல என் வாழ்வின் உயரம்; இப்படியே தொடர்ந்தால் அதுவே துயரம்; நான் உயர்ந்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இலட்சியத்துடன் போராடும்போது, மேஸ்திரி ஆகி, கண்காணிப்பாளராகி ஒப்பந்தக்காரர் ஆகி, மகத்தான உயரங்களைத் தொட்டவர்கள் உண்டு. ஆனால் இவை மட்டுமே தகுதிகள் ஆகிவிடா. சிரிக்கத் தெரியாதவனைச் சிறப்புகள் சென்றடையா. உர் என்ற முகமும்; சுடுசொற்களும், பிறரிடம் நன்கு கலந்து பேசத் தெரியாத குணமும் ஒருவனைப் பின்னோக்கித் தள்ளும் பரமபத சோபன படத்தில் உள்ள பாம்புகள் போன்றவை.
சொல் சுத்தம், கைச்சுத்தம் இல்லாதவர்கள் தற்காலிய உயரங்களைத் தொடலாம். இமயங்களும் ஆல்ப்ஸ்களும் இவர்களுக்கு உரியன அல்ல.
பிறரை மதியாத போக்கும் காலை வாரிவிடும் தன்மைகொண்டதே. மனத்தில் மரியாதை உண்டாகிறதோ இல்லையோ, உடலில் சொல்லில் இது வெளிப்பட வேண்டும்.
பணிபுரியும் அவ்வளவு இடத்திலும் அரசியல் என்பது நீக்கமற உண்டு. நெருப்பாற்றில் நீச்சல் அடிப்பதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சாணக்கியனாக மாறி இதை அழகுறச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
மனத்தில் தோன்றியதையெல்லாம் பேசிவிடக்கூடாது. இந்த உலகில் வாய் கொண்டு வளர்ந்தவர்களைவிட வாயால் வீணாகிப் போனவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வார்த்தைள் ஒரு கைப்பிடி இல்லாத, இருமுனைகளிலும் கூர்மை கொண்ட கத்தி, குத்துபவனையும் பதம் பார்த்துவிட வல்லது. எனவே சாதுரியம் தேவை.
”நல்லாத்தான். கடுமையாத்தான் உழைக்கிறேன். ஆனாலும் முன்னேற்றமே இல்லையே ஏன்?” என்று கேள்வி கேட்பவர்களுக்கு விளக்கம் தந்துவிட்டேன் என்று நம்புகிறேன்!.

Comments