இதயத்தை பாதிக்கும் உடற்பருமன்

உடற்பருமனால் இதயம் பாதிக்கப்படுகிறது என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை:


உடற்பருமன் உண்டாவதற்கு முக்கியக்காரணங்கள் என்று பார்த்தால், உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடுகள், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, உணவு முறை ஆகியவையே முக்கிய இடத்தைப்பிடிக்கும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்.


ஹார்மோன் மாறுபாடுகள்:


உடற்பருமன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. வயது வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் உண்டாகிறது.

ஆண்களுக்கு முன்னாலும் (வயிற்றுப் பகுதி), பெண்களுக்குப் பின்னாலும் (புட்டப் பகுதி) அதிகக்கொழுப்பு சேர்கிறது.
இதுவே ஹார்மோன் மாறுபாடுகளால் உண்டானால் உடல் பருத்திருக்கும்.

சில பெண்கள் பருவவயதில் கொடி இடை... அன்ன நடை, மதிமுகம், மதுக் கிண்ணம்... இப்படி வர்ணிக்கத்தக்க வகையில் அழகாக இருப்பார்கள். முப்பத்தைந்து நாற்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது.

பூசணிக்காய் போல உடற்பருத்து, வாத்து நடையுடன் முட்டியைப்பிடித்துக் கொண்டு நடப்பார்கள். கொஞ்ச தூரம் நடப்பதற்கே பெருமூச்சு வாங்கும். இதற்கு காரணம் அவர்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்ற பெண்மை இயக்குநீரின் அளவில் குறைவு ஏற்படுவது தான். இந்த சமயத்தில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் அதிகரிக்கிறது. ரத்த கொழுப்பு அதிகரித்து ரத்த நாளங்கள் சுருங்கி பக்க வாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினை கள் தலைதூக்குகின்றன. தைராய்டு கோளாறுகளாலும் உடற்பருமன் உண்டாகிறது.

வாழ்க்கை முறை

வீட்டில் தொலைக்காட்சி, பகல் தூக்கம், சீதோஷணம் காரணமாக வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடத்தல், கவலைப்பட்டுக்கொண்டு பட்டினி கிடத்தல், சிறுகச்சிறுக நொறுக்குத் தீனி, என பல காரணங்களைச் சொல்லலாம். நீரிழிவு போன்ற நோய்களாலும் உடற்பருமன் உண்டாகிறது.

உடற்பயிற்சியின்மை

பருமனாக இருப்பவர்கள் உடற்பயிற்சியை மேற்கொண்டு எடையைக் குறைத்தால் இதய பாதிப்புகளை கணிசமாக தவிர்க்கலாம். இவர்கள் ஏரோபிக் பயிற்சி, நடப்பது, நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், கயிறு தாண்டுதல், ஓடுதல், குனிந்து நிமிர்ந்து ஏதாவது வேலை செய்தல் போன்ற பணிகளைச் செய்யலாம்.

இத்தகைய பயிற்சிகளால் உடல் எடை குறைவதோடு, இரத்தக் கொழுப்பின் அளவும், உடலில் உபரியாக தேக்கி வைக்கப்படுகிற கொலஸ்டிராலின் அளவும் குறையும். தமனிகளில் ஏற்படும் அடைப்பும் நீங்கும்.

இவ்வாறு செய்யாமல் அடுத்தடுத்து சாப்பிட்டு, வெறுமனே பொழுதைக் கழிக்கும்போது உடல் பருமன், பல வீனம் போன்றவை உண்டாகி இதயம் பாதிக்கப்படுகிறது.

உணவுப் பழக்கம்:

உடற்பருமனுக்கு உணவுப் பழக்கம் மிக முக்கியமான ஒன்று. இருந்தும் இதை ஏன் இறுதியாகக் கூறுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம்.

பலர் ருசிக்காக, பொழுது போக்குக்காக துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாமிச வகைகளை சாப்பிடுகிறார்கள். இவை இதயத்திற்கு தீங்கானவை என்பதை அறியாமலேயே:

உணவுப் பொருட்களை கொழுப்புச்சத்து உள்ளவை, நார்ச்சத்து உள்ளவை என இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

கொழுப்புச் சத்து உள்ள உணவுப்பொருட்களுள், மாமிசம், வறுத்த உணவு, எண்ணெய்ப் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய் நீக்கப்படாத பால், பால் பொருட்கள், கிரிம்கள், இனிப்பு போன்றவை முக்கியமானவை. இவற்றை அதிகளவில் சாப்பிடும்போது தேவைக்கு அதிகமான கொழுப்புகள் சேர்த்துவைக்கப்பட்டு உடலின் அளவு பெரிதாகிறது.

நார்ச்சத்துப் பொருட்களில் இத்தகைய கொழுப்புச்சத்துக்கள் குறைவாகவே இருக்கும். தவிர இந்த நார்;ச்சத்துக்கள் போதுமான சக்தியைத் தவிர மற்றவற்றை வெளியேற்றி விடுகின்றன.

சரி, உணவுகளால் கொழுப்பு உண்டாகிறது என்கிறீர்களே, அது எவ்வாறு உண்டாகிறது? அது எப்படி இதயத்தை பாதிக்கிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

நாம் உயிர் வாழவேண்டுமானால், ஆரோக்கியமாக செயல்பட வேண்டு மானால் கொலஸ்டிரால் என்ற கொழுப்புச்சத்து மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் இந்த கொலஸ்டிரால்லைபோ புரோட்டீன்களாக மாற்றப்பட்டு ரத்த நாளங்கள் வழியாக உடலின் மற்ற இடங்களுக்குக் கடத்தப்படுகிறது.

கொலஸ்டிராலை பல வழிகளில் உடலில் உள்ள ஈரல் உருவாக்கித் தருகிறது. அவற்றில் உணவின் பங்களிப்பு இருபது முதல் முப்பது விழுக்காடு. நமது உடம்புக்கு தேவையான சக்தி களில் 40% கொழுப்பு வடிவத்தில் இருக்கும். இந்த கொழுப்பில் அடர்த்தி அதிகமான கொழுப்பு (எச்.டி.எல்), அடர்த்தி குறைவான கொழுப்பு (எல்.டி.எல்.), மிககுறைவான அடர்த்தியுள்ள கொழுப்பு, மிக அடர்த்தி அதிகமான கொழுப்பு என நான்கு வகைகள் உள்ளன. இதில் பல உட்பிரிவுகளும் உள்ளன.

இவற்றை ஈரல் உண்டாக்கி பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. லைப்போபுரோட்டீன்கள் மூலம் செல்லும் கொழுப்புக்கள் ரத்தத்தில் மிதந்து செல்லும். தேவையிருப்பின் சக்தியாக மாற்றப்பட்டு செலவாகும். இல்லாவிட்டால் அப்படியே கொழுப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும். அடர்த்தி அதிகமான கொழுப்பை நல்ல கொழுப்பு என்றும், அடர்த்தி குறைந்த கொழுப்பை கெட்ட கொழுப்பு என்றும் கூறுகிறோம்.

நல்ல கொழுப்பு அளவு குறைந்தாலும், கெட்ட கொழுப்பின் அளவு கூடினாலும் இதயம் பாதிக்கப்படும். இவை இரண்டுமே இருக்கவேண்டிய அளவுக்குக் கீழ் இருந்தாலும் பிரச்சினைதான்.

இன்னொரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்

நமக்கு தினமும் சராசரியாக இரண்டாயிரம் கலோரி சத்து தேவை. அதிக மாக சாப்பிடும்போது இந்த அளவு கூடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உபரியான சத்துகள் க்ளைக்கோஜன், கொழுப்புச்சத்து என மாற்றப்பட்டு உடலில் அங்கங்கே சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் எடை கூடிவிடுகிறது.

எடை கூடினால் எப்போதும் பாரமான ஒரு பையை கழுத்தி கட்டி தொங்கவிட்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படி தேவையில்லாமல் உடல் பருமனை சுமக்கவேண்டியிருக்கும். தவிர இதயத்திற்கும் கூடுதலான வேலைப்பளு உண்டாகும். ரத்த அழுத்தம் கூடும். நுரையீரலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களால் ரத்த நாளம் குறுக நேரிடும் போது இதய பாதிப்புகள் உண்டாகின்றன. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறையில் மாற்றங்கள், புகைப்பழக்கத்தை கைவிடுதல் போன் றவை மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

உடல் எடையைக் குறைப்பதற்காக பட்டினி கிடத்தல், வேளை தவறி உண்ணுதல் போன்றவை பலனளிக்காது. ஒரு வேளை உணவு மறுத்து அடுத்த வேளை அதிகம் சாப்பிடுவதாலும், உணவை கட்ட நொறுக்குத் தீனிகளை உண்பதாலும் உடல் எடை அதிகரித்து இதய பாதிப்புகள் உண்டாகின்றன.

source : http://eegarai.darkbb.com/-f14/-t1023.htm

Comments