கலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்




அந்த கோவிலின் வாசலில் ஒரு சாமியார் நின்று கொண்டிருந்தார். பல கடவுள்களைப் பற்றி அவர் பேசினார்.
நகரத்து மக்கள் அவருடைய பேச்சை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சொல்லும் கடவுள்களை அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள். இந்த கடவுளர்கள், எப்போதும் தங்களோடு வாழ்வதாகவும், தாங்கள் செல்லுமிடமெல்லாம் உடன் வருவதாகவும் அவர்கள் நம்பினார்கள்.
அடுத்த சில வார்ங்களில், அதே நகரின் சந்தைதெருவில், இன்னொரு மனிதன் தோன்றினான். அவன், “கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை” என்று கடுமையாக வாதிட்டான்.
இதை கேட்டுகொண்டிருந்தவர்களில் சிலருக்கு ரொம்ப சந்தோஷம். ஏனெனில், அவர்களுக்குக் கடவுளை நினைத்து பயம் இருந்த்து. தாங்கள் செய்த, செய்ய நினைக்கும் தவறுகளுக்காக, கடவுள் தங்களை தண்டித்து விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தவர்கள். இப்போது, ‘கடவுள் இல்லை’ என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
இன்னும் சில நாட்கள் கழிந்தன. இப்போது, இன்னொரு புதிய மனிதன் அந்த ஊருக்கு வந்தான். ‘கடவுள் ஒருவர்தான், பல கடவுள்கள் இல்லை. ஒரே ஒரு கடவுள்தான் உண்டு’ என்று பிரசாரம் செய்தான் அவன்.
இந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் பயமும்தான் ஏற்பட்டது. ஏனெனில், பல கடவுள் இருக்கும்போது, அவர்களில் ஒருவராவது தங்கள் பாவங்களை மன்னிக்கும் வாய்ப்பு உண்டு. இப்போது, ஒரே கடவுள் என்றாகிவிட்டால், அவர் கோபமானவரா, சாந்தமானவரா, நாம் செய்யும் தவறுகளை எப்படிப் பார்ப்பாரோ என்றெல்லாம் எண்ணி அவர்கள் கவலைப் பட்டார்கள்.
சில மாதங்களுக்குப்பின், அந்த நகரில் இன்னொரு மனிதன் தோன்றி, ‘மொத்தம் மூன்று கடவுள்கள் தான் உண்டு’ என்றான் – ‘ அந்த மூன்று கடவுளர்களும் ஒன்றாக இணைந்து, காற்றில் உலவுகிறார்கள். இந்த உலகைக் காக்கிறார்கள்’ என்றும் சொன்னான் அவன் – ‘ அந்த கடவுளர்கள் மூவருக்கும், ஒரு தாய் உண்டு. அவள் கருணை வடிவானவள்.’

இப்போது, ஊரிலிரிந்த எல்லோரும் திருப்தியாக உணர்ந்தார்கள். மூன்று கடவுள்கள் என்பதால், நாம் செய்வது பாவமா, புண்ணியமா என்பதில் அவர்கள் ஓர் உறுதியான முடிவுக்கு வருவது சாத்தியமில்லை. தவிரவும், கருணைவடிவான அவர்களின் தாய், நமக்காக அவர்களிடம் சிபாரிசு செய்து, நம்மை காப்பாற்றி விடுவாள்.’

அதன்பின், இன்றுவரை, அந்த நகரத்து மக்கள் மாறிமாறி விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் – பலரா, ஒரே ஒருவரா, ஒன்றுமில்லையா அல்லது மூன்று பேரா. மொத்தம் எத்தனைக்கடவுள்கள் உண்டு என்பதில், அவர்கள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

Comments